5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: ஜமகண்டி தொகுதியில் சித்தராமையா பிரசாரம்
5 தொகுதிகளில் இடைத்தேர்தலையொட்டி ஜமகண்டி தொகுதியில் சித்தராமையா பிரசாரம் செய்தார்.
பாகல்கோட்டை,
5 தொகுதிகளில் இடைத்தேர்தலையொட்டி ஜமகண்டி தொகுதியில் சித்தராமையா பிரசாரம் செய்தார்.
சித்தராமையா பிரசாரம்
சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. சிவமொக்கா, மண்டியா, ராமநகர் ஆகிய தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட்டுள்ளன.
இந்த இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜமகண்டி தொகுதியில் சிக்கலகி கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நியாமகவுடாவை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசும்போது கூறியதாவது:-
விவசாய கடன் தள்ளுபடி
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதற்கு எடியூரப்பா, சட்டசபையில் பேசும்போது, என்னிடம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் எந்திரம் இல்லை என்று கூறிவிட்டார்.
பிரதமர் மோடியை நாங்கள் குழுவாக சென்று சந்தித்தோம். அப்போது தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அப்போது பா.ஜனதாவினர் வாய் திறக்கவே இல்லை. அதன் பிறகு நான் கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்தேன்.
மீண்டும் வருவேன்
இப்போது கூட்டணி ஆட்சியிலும் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். நீங்கள் இதுபற்றி ஆலோசிக்க வேண்டும். விவசாய கடனை தள்ளுபடி செய்தது காங்கிரஸ் தான், பா.ஜனதா அல்ல. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நான் மீண்டும் இங்கு வருவேன். நிபந்தனை என்னவென்றால், காங்கிரசை வெற்றி பெற வைத்தால் நான் வருவேன்.
ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் சேர்ந்து நாங்கள் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளோம். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரே நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருக்கிறார். இந்த பகுதியில் பாதியில் நின்றுள்ள நீர்ப்பாசன திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி தருகிறோம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story