நாமக்கல் மாவட்டத்தில் 70 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் 70 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 27 Oct 2018 5:00 AM IST (Updated: 27 Oct 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 70 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் மற்றும் ஆதரவு சங்கத்தின் 2017-18-ம் ஆண்டுக்கான பொதுக்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் அவர் பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து தொடர்கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று 12-ம் வகுப்பு முடித்த 68 மாணவர்கள் விவசாயம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பட்டயச்சான்றிதழ் மற்றும் தொழிற்பயிற்சி பயின்று வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தமிழக அரசின் மூலம் மாதந்தோறும் ரூ.500 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

2017-18-ம் கல்வியாண்டில் 68 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.4.08 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. தொழிலாளர் துறை, தொழிற்சாலைகள் துறை மற்றும் வருவாய் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட 11 ஆய்வுகளில் 70 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன்மூலம் அந்த மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள சிறப்பு பயிற்சி மையங்களில் தொடர்கல்வி பெற இயலும்.

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை ஒழிக்கும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதோடு, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு உள்ளது. அதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாவட்டமாக மாற்றுவதற்கு அரசு அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கலெக்டர் ஆசியா மரியம் பேசினார்.

இதில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அந்தோணி ஜெனிட் உள்பட அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



Next Story