பச்சை நிறமாக மாறிய மேட்டூர் நீர்த்தேக்க பகுதி - துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்


பச்சை நிறமாக மாறிய மேட்டூர் நீர்த்தேக்க பகுதி - துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 26 Oct 2018 10:48 PM GMT (Updated: 26 Oct 2018 10:48 PM GMT)

மழைநீருடன் ரசாயன கழிவுநீர் கலந்து வந்ததால் பச்சை நிறமாக மேட்டூர் நீர்த்தேக்க பகுதி மாறியது. துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

கொளத்தூர்,

நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை அடைந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அவ்வாறு திறந்து விடப்பட்ட மழைநீருடன் சேர்ந்து பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து திறந்து விடப்பட்ட கழிவுநீரும், பல தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுநீரும், மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளுக்கு வந்து தேங்கி நின்றது.

இந்த கழிவுநீர் தேங்கியதால் பண்ணவாடி, சேத்துக்குளி, கோட்டையூர் போன்ற நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள காவிரி நீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. எண்ணெய் பிசுபிசுப்புடன் துர்நாற்றம் வீசுகிறது. மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் மாசடைந்து அளவுக்கு அதிகமாக துர்நாற்றம் வீசுவதால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக மீனவர்கள் தங்களது மீன்பிடித்தொழிலை கைவிட்டு உள்ளனர்.

மேலும் இந்த மாசடைந்த நீரால் காவிரி கரையோர கிராமங்களில் உள்ள மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த மாசடைந்த நீரை குடிக்கும் கால்நடைகளும் நோய் தாக்கி பலியாகும் வாய்ப்பு உள்ளது. எனவே காவிரி கரையோர கிராமங்களில் நோய் பரவுவதை தடுக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Next Story