சேலையூரில் 2 நாள் நடக்கிறது: பிளாஸ்டிக்குக்கு பதிலான மாற்று பொருள் கண்காட்சி


சேலையூரில் 2 நாள் நடக்கிறது: பிளாஸ்டிக்குக்கு பதிலான மாற்று பொருள் கண்காட்சி
x
தினத்தந்தி 27 Oct 2018 4:27 AM IST (Updated: 27 Oct 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடக்கிறது.

தாம்பரம்,

பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக் கிழமையும்) சேலையூரில் உள்ள நகராட்சி பள்ளியில் நடைபெறுகிறது என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

விழிப்புணர்வு கண்காட்சி

தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு 1-1-2019 முதல் தடைவிதித்து உள்ளது. இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடைசெய்வது குறித்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள்களை பயன்படுத்துவது குறித்த விழிப் புணர்வு கண்காட்சி நடத்த முடிவு செய்து உள்ளது.

இன்றும், நாளையும் நடக்கிறது

அதன்படி தாம்பரம் நகராட்சி சார்பில், சேலையூரில் உள்ள நகராட்சி பள்ளியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள் பயன்படுத்துவது குறித்த 2 நாள் விழிப்புணர்வு கண்காட்சி இன்றும் (சனிக் கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பிளாஸ்டிக்குக்கு பதிலான மாற்றுபொருள் தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களது தயாரிப்புகளான துணி, சணல் பை, பாக்குமட்டை, மக்காச்சோளம், காகித கூழ் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட தட்டுகள், குடிநீர் பாட்டில் உள்ளிட்டவைகளை கண்காட்சி அரங்கில் பொதுமக்கள் பார் வைக்காக வைக்கிறார்கள்.

கலை நிகழ்ச்சிகள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

மக்கும் குப்பைகளை உரமாக்குவது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கவும், குப்பைகளை அரைக்கும் எந்திரங்களின் பயன்பாடு, வீடுகளில் குப்பைகளை உரமாக்கும் செயல்முறைகள் குறித்தும் இந்த கண்காட்சியின்போது பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story