விருத்தாசலம் அருகே: டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல் - தீக்குளிக்க போவதாக கூறியதால் பரபரப்பு


விருத்தாசலம் அருகே: டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல் - தீக்குளிக்க போவதாக கூறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Oct 2018 9:45 PM GMT (Updated: 26 Oct 2018 11:04 PM GMT)

விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் தீக்குளிக்க போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள தே.கோபுராபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், கடை திறக்கப்பட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக்கடைக்கு சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த குடிபிரியர்கள் சாரைசாரையாக வந்து மது குடித்துவிட்டு செல்கிறார்கள்.

அவ்வாறு வந்து மது அருந்தும் சிலர், போதை தலைக்கு ஏறியதும், அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளை கேலி செய்வது வாடிக்கையாகி விட்டது. அதுமட்டுமின்றி சிலர், மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி மறைத்து வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இது பற்றி போலீசுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே டாஸ்மாக் கடையை மூடக்கோரி அந்த கிராமத்து பெண்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தே.கோபுராபுரம் பஸ் நிறுத்தம் அருகில் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர் கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோஷமிட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள், டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும், இந்த கடையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது, என்று கூறி, மறியலை கைவிட மறுத்தனர்.

இதன் காரணமாக போலீசாருக்கும், பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு பெண், தீக்குளிக்கப்போவதாக கூறி தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். பின்னர் போலீசார், இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுங்கள் என்றனர். இதனை ஏற்ற பெண்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story