ஆற்காட்டில் பரபரப்பு கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து வீட்டின் கூரை பறந்தது சிறுவன் உயிர்தப்பினான்


ஆற்காட்டில் பரபரப்பு கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து வீட்டின் கூரை பறந்தது சிறுவன் உயிர்தப்பினான்
x
தினத்தந்தி 27 Oct 2018 5:15 AM IST (Updated: 27 Oct 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதில் வீட்டின் கூரை பறந்து பொருட்கள் எரிந்து நாசம் ஆயின. சம்பவத்தின்போது தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் திடுக்கிட்டு எழுந்து தப்பி ஓடியதால் உயிர்பிழைத்தான்.

ஆற்காடு மேஸ்திரி லத்தீப் சாயபு தெருவை சேர்ந்தவர் காஞ்சனா. கூலி தொழிலாளி இவரது மகன் பாலசந்தர் (வயது 23). இவர்கள் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் குடிசை வீடு கட்டி வசித்து வந்தனர் .

இந்நிலையில் காஞ்சனா காலை ரத்தினகிரியில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தார். மகன் பாலசந்தர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவர்களது உறவினர் மகனான லிங்கேஷ்வரன் (4) தூங்கிக் கொண்டிருந்தான்.

அப்போது வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. திடுக்கிட்டு எழுந்த சிறுவன் வெளியே ஓடி வந்து கூச்சலிட்டான். இதைப் பார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முற்படும்போது குடிசை வீட்டிலிருந்த மேலும் 2 கியாஸ் சிலிண்டர்கள் பலத்த சத்தத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் வீட்டின் மேற்கூரை பறந்து சென்று விழுந்தது. தீ விபத்தில் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், நகைகள், துணிமணிகள் மற்றும் வீட்டிலிருந்த டி.வி., பிரிட்ஜ், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சேதமடைந்துள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ., நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் அரசின் நிவாரணம், அரிசி, வேட்டி, சேலை, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story