அதிக புகை வராத பட்டாசுகளை வெடிக்க வேண்டும்; பொதுமக்களுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள்
அதிக புகை வராத பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வேளாண் வளர்ச்சி மற்றும் விவசாயிகள் நலவாழ்வு ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளன. விவசாயிகள் அனைவரும் தற்போது மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அளவு பயிர்க்கடன் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 16 மணி நேரமாவது விவசாய பணிக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கால்நடை துறை சார்பில் இந்த ஆண்டு 3 ஆயிரத்து 500 பேருக்கு ஆடுகளும், 200 பேருக்கு மாடுகளும் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் நாட்டுக்கோழிகள் வழங்குவதற்காக ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு விரைவில் நாட்டுக்கோழிகள் வழங்கப்படும்.
18 எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்ய இருப்பது, அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். கோர்ட்டு என்ன தீர்ப்பு அளிக்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். முதல் –அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதுபோல், தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறது.
பட்டாசு வெடிப்பது தொடர்பாக ஒரு சில உத்தரவுகளை கோர்ட்டு பிறப்பித்து உள்ளது. அதனை மக்கள் கடை பிடிக்க வேண்டும். அதிக அளவில் புகை வராத பட்டாசுகளை வெடிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.