திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது ரோட்டில் பால் ஆறாக ஓடியது


திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது ரோட்டில் பால் ஆறாக ஓடியது
x
தினத்தந்தி 28 Oct 2018 3:30 AM IST (Updated: 27 Oct 2018 7:48 PM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து ரோட்டில் பால் ஆறாக ஓடியது.

தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும் அங்கிருந்து தமிழகத்துக்கும் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

குறுகிய வளைவுகளை கொண்டதால் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. மேலும் ஒரு சில நேரங்களில் பாரம் தாங்காமல் கவிழ்ந்து விடுகின்றன. இதனால் விபத்து ஏற்படுவதும் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து டேங்கர் லாரி பால் ஏற்றிக்கொண்டு கோவைக்கு சென்று கொண்டிருந்து. இந்த லாரி திம்பம் மலைப்பாதை 27–வது கொண்டை ஊசி வளைவில் நேற்று காலை 8.30 மணி அளவில் திரும்பியபோது நிலைதடுமாறி லாரி ரோட்டோரமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் லாரியில் இருந்த மூடி திறந்து பால் ரோட்டில் கொட்டியது. இதனால் பால் ரோட்டில் ஆறாக ஓடியது. ரோட்டோரமாக கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. மற்ற வாகனங்கள் வழக்கமாக சென்றன. கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்கும் பணி நடந்து வருகிறது.


Next Story