ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் 30 பவுன் நகை –பணம் கொள்ளை


ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் 30 பவுன் நகை –பணம் கொள்ளை
x
தினத்தந்தி 27 Oct 2018 10:30 PM GMT (Updated: 27 Oct 2018 2:18 PM GMT)

ஈரோட்டில், நிதி நிறுவன அதிபர் வீட்டில் 30 பவுன் நகை மற்றும் பணத்தை துணிகரமாக கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு திண்டல் ஆர்கேட் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 51). இவர் ஈரோடு ஆசிரியர் காலனி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி காஞ்சனா. இவர்களுக்கு யாழினி, சக்தியாகவி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவி வழக்கம்போல் தன்னுடைய நிதி நிறுவனத்திற்கு சென்று விட்டார். காஞ்சனா தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு ஜவுளி எடுப்பதற்காக ஈரோட்டிற்கு வந்துள்ளார். பின்னர் ஜவுளிகள் வாங்கி விட்டு மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர்.

மெயின் கேட்டை அவர்கள் திறந்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பதற்றத்துடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன.

மேலும் பீரோக்களில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. கைரேகை நிபுணர்களும் வந்து, அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொறுத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள். இந்த துணிகர சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


Next Story