பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: போக்சோ சட்டத்தில் 109 வழக்குகள்
தேனி மாவட்டத்தில் கடந்த 22 மாத கால கட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
தேனி,
பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்று காலம் காலமாக பெருமிதமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அந்த கண்கள் பிஞ்சுப் பருவத்திலேயே நசுக்கப்பட்டு, நரக வேதனைக்குள்ளாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையானது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருவதால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பேரச்சம் பெற்றோரிடம் ஏற்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடப்பதில் தேனி மாவட்டமும் விதி விலக்கில்லை. இங்கும் சில ஆண்டுகளாக இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) கொண்டு வரப்பட்டது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாலோ, பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டாலோ இச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் மொத்தம் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் கடந்த 22 மாத கால கட்டத்தில் இச்சட்டத்தின் கீழ் 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை பொறுத்தவரை 2 காரணங்களை முக்கியமாக பார்க்க வேண்டியது உள்ளது. முதலாவது சிறுமிகள் வீடுகளில் தனியாக இருக்கும்போது பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி உள்ளனர். 2-வதாக பள்ளிப் பருவத்தில் காதல் என்ற மாயையில் விழுந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
வளர்இளம் பருவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், ஆசை வார்த்தைகளை நம்பியும் காதல் வயப்பட்டு சீரழிவில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து உள்ளன. இது, பள்ளிப் பருவத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததை காட்டுகிறது.
எனவே, வளர்இளம் பருவம் குறித்தும், இந்த பருவ காலத்தில் உடல் மற்றும் மனதளவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் மாணவிகளுக்கு அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இதற்கு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு, அதற்குரிய கடுமையான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளியில் அளவோடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நின்று விடாமல் பொதுமக்களையும் நேரடியாக சென்றடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான சம்பவங்களில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் 50 வயதை கடந்தவர்களே அதிகம் உள்ளனர்.
பெற்றோர் வேலைக்கு சென்று விடும் போது, பள்ளிக்கு சென்று வீட்டுக்கு வந்து சிறுமிகள் தனிமையில் இருப்பதை பயன்படுத்தி அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதும், பின்னர் வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டியதும் கடந்த காலங்களில் நடந்துள்ளன.
எனவே, கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளிலும் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், சட்டங்கள், தண்டனைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story