ஜவுளி வாங்குவது போல் நடித்து ஆடைகள் திருடிய 2 பெண்கள் கைது
நிலக்கோட்டையில், ஜவுளி வாங்குவது போல் நடித்து ஆடைகளை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவர், நிலக்கோட்டை-வத்தலக்குண்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீபாவளிக்காக தற்காலிகமாக ஜவுளிக்கடை அமைத்துள்ளார்.
நேற்று முன்தினம் 2 பெண்கள், ஆடைகள் வாங்குவதற்காக வந்தனர். பின்னர் அவர்கள், ஆடைகளை பார்த்துவிட்டு ஒன்றும் எடுக்காமல் திரும்பி சென்றுள்ளனர். மேலும் அவர்களது நடவடிக்கையில் கடை ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கடையில் ஆடைகளை சோதனை செய்தபோது, ரூ.6 ஆயிரத்து 500 மதிப்புள்ள சுடிதார்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்து சென்ற அவர்களை, ஊழியர்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம் மேலவைத்தியநாதபுரத்தை சேர்ந்த பழனியம்மாள் (50), சகுந்தலா (60) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் திருடிய ஆடைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அருகே நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story