முதுமலை புலிகள் காப்பக சாலைகளில் செல்ல சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூல்
முதுமலை புலிகள் காப்பக சாலைகளில் செல்ல சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மசினகுடிக்கு வருபவர்கள் தெப்பக்காட்டுக்கு சென்று, அங்கு வனத்துறையினர் செயல்படுத்தி வரும் வாகன சவாரி மற்றும் யானை சவாரிகளில் பொழுதுபோக்கி வருகின்றனர். இதில் பயணம் செய்ய முடியாத சுற்றுலா பயணிகள் மசினகுடி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஜீப்களில் ஏறி மாயார், பொக்காபுரம், சிங்காரா உள்ளிட்ட சாலைகளில் சவாரியாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு வனப்பகுதியில் சென்று வனவிலங்குகளை கண்டு ரசிக்க முடிந்தது. இதேபோல் மசினகுடியில் ஜீப் தொழிலை நம்பி இருப்பவர்களுக்கும் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு யானை வழித்தட வழக்கில், 38 தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அந்த தனியார் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் மசினகுடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. எனவே மசினகுடி பகுதியில் சுற்றுலா தொழிலையும், ஜீப் தொழிலையும் நம்பி உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள சாலைகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த அரசாணையை முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் நேற்று அமல்படுத்தி உள்ளது.
இதனையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாயார், பொக்காபுரம், சிறியூர் போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ரசீது பெற்று பயணிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக மசினகுடியில் உள்ள துணை கள இயக்குனர் அலுவலகத்தில் சிறப்பு பயணச்சீட்டு மையம் திறக்கபட்டு உள்ளது. மேலும் மாயார், பொக்காபுரம், சிறியூர் சாலைகளில் வாகன சவாரி செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் பயணச்சீட்டு வாங்கினால், அவர்கள் மசினகுடியை சார்ந்த தனியார் ஜீப்கள் மூலம் குறிப்பிட்ட சாலைகளில் பாதுகாப்பாக அழைத்து சென்று, மீண்டும் அதே இடத்தில் இறக்கிவிடப்படுவார்கள். வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதேபோன்று மசினகுடி பகுதியை சார்ந்த மக்களுக்கும் வாழ்வாதாரம் கிடைத்துள்ளது. இதனிடையே முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் விரைவில் சூழல் சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்து, அதன் மூலம் புலிகள் காப்பக வெளிமண்டல வனப்பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றுலா பயணிகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மசினகுடி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.