குன்னூர் அருகே காட்டுப்பன்றி தாக்கி காவலாளி படுகாயம்
குன்னூர் அருகே காட்டுப்பன்றி தாக்கி காவலாளி படுகாயம் அடைந்தார்.
குன்னூர்,
குன்னூர் அருகே உள்ள கோடமலை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம்(வயது 52). இவர் மேல்குன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா(46). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கோடமலை குடியிருப்பு பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு பகுதிக்குள் ஒரு காட்டுப்பன்றி புகுந்தது. பின்னர் சண்முக சுந்தரத்தின் வீட்டின் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் காட்டுப்பன்றி தவறி விழுந்தது. கால்வாய் குறுகலாக இருப்பதால், அதிலிருந்து எழுந்து வெளியே வர முடியாமல் இரவு முழுவதும் அந்த காட்டுப்பன்றி தவித்தது.
இதை நேற்று அதிகாலையில் பார்த்த சண்முக சுந்தரம் மற்றும் பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வேட்டைத்தடுப்பு காவலர்கள் வந்தனர். அவர்களுடன், சண்முக சுந்தரம் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து காட்டுப்பன்றியை மீட்டனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த காட்டுப்பன்றி சண்முக சுந்தரத்தை தாக்கிவிட்டு, வனப்பகுதிக்குள் சென்றது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே பொதுமக்கள் அவரை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், காட்டுப்பன்றியால் தாக்குதலுக்கு ஆளான சண்முக சுந்தரத்துக்கு அரசின் நிவாரண நிதியான ரூ.15 ஆயிரத்தை நேரில் சென்று வழங்கினர்.