மின்னணு எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா? மாதிரி வாக்குப்பதிவு செய்து அரசியல் கட்சியினர் சோதனை


மின்னணு எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா? மாதிரி வாக்குப்பதிவு செய்து அரசியல் கட்சியினர் சோதனை
x
தினத்தந்தி 27 Oct 2018 10:45 PM GMT (Updated: 27 Oct 2018 5:36 PM GMT)

மின்னணு எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா? என்று வாக்களிப்பை சரிபார்க்கும் எந்திரத்தின் மூலம் மாதிரி வாக்குப்பதிவு செய்து அரசியல் கட்சியினர் சோதனை செய்தனர்.

விழுப்புரம்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதற்காக விழுப்புரம் அரசு சேமிப்பு கிடங்கில் 4,430 மின்னணு வாக்கு எண்ணிக்கை எந்திரங்களும், 8,150 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தனர் என்ற விவரத்தை சரிபார்க்கும் 4,430 எந்திரங்களும் வைக்கப் பட்டுள்ளது.

இந்த எந்திரங்களில் ஏதேனும் சிறு, சிறு பழுதுகள் உள்ளனவா? என்று ஒவ்வொன்றாக பெங்களூருவை சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளர்கள் பரிசோதனை செய்தனர். இந்த பணி முடிவடைந்ததும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த எந்திரங்களில் வாக்களிப்பை சரிபார்க்கும் எந்திரத்தின் மூலம் மாதிரி வாக்குப்பதிவு செய்து அரசியல் கட்சியினர் சோதனை செய்வதற்காக நேற்று முன்தினம் காலை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல், தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன், மண்டல துணை தாசில்தார்கள் கண்ணன், மகாலிங்கம், வெங்கட்ராஜ் ஆகியோர் முன்னிலையில் சேமிப்பு கிடங்கு அறை திறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் செந்தில், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன், காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் சிவா, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு வாக்களிப்பை சரிபார்க்கும் எந்திரத்தின் மூலம் மாதிரி வாக்குப்பதிவு செய்து சோதனை செய்தனர்.

மேலும் இதுசம்பந்தமாக எழுந்த சந்தேகங்களை அரசியல் கட்சியினர், அதிகாரிகளிடம் கேட்டறிந்து தெளிவு பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து நேற்றும் மாதிரி வாக்குப்பதிவு செய்து சோதனை செய்வதற்காக அரசியல் கட்சியினருக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதில் அரசியல் கட்சியினர் மாதிரி வாக்குப்பதிவு செய்து சோதனை செய்தனர். பின்னர் மீண்டும் எந்திரங்கள் அனைத்தும் குடோனில் உள்ள தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Next Story