1 லட்சம் ஹெக்டேரில் பயறு வகைகள் சாகுபடி செய்ய இலக்கு வேளாண் அதிகாரி தகவல்


1 லட்சம் ஹெக்டேரில் பயறு வகைகள் சாகுபடி செய்ய இலக்கு வேளாண் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2018 3:30 AM IST (Updated: 27 Oct 2018 11:30 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சம் ஹெக்டேரில் பயறுவகைகள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்
இதுகுறித்து கண்டமங்கலம் வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நமது உடலில் ரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்க புரத சத்து மிக அவசியம். இது அதிகமாக பயறு வகைகளில் கிடைக்கிறது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் 10 லட்சம் ஹெக்டேரில் பயறுவகைகள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்டமங்கலம் வட்டாரத்தில் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பயறு வகைகளில் முதன்மை பயிரான உளுந்தினை தனி பயிராகவும், கரும்பு, சவுக்கு, வாழை போன்ற பயிர்களில் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம்.

சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உளுந்தினை ரைசோப்பியம் மற்றும் பாஸ்போ பேக்டீரியா போன்ற நுண்ணுயிர்களுடன் கலந்து நெல் நடவு செய்த வயல்களின் வரப்புகளில் பக்கவாட்டின் 4 புறங்களிலும் 30 செ.மீ. அதாவது ஒரு அடி இடைவெளியில் விதைப்பு செய்ய வேண்டும். தட்டைப்பயிராக இருந்தால் 45 செ.மீ. இடைவெளியில் விதைப்பு செய்ய வேண்டும். இதனால் பயறு வகைக்கு என்று தனியாக நீர் பாய்ச்ச தேவையில்லை.

பயறு வகைகளில் தோன்றும் பொறிவண்டு போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் நெல் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உட்கொண்டு செயற்கை பூச்சி மருந்து அடிப்பதை குறைக்க வழிசெய்கிறது. மேலும் நெல் வயல்களின் வரப்புகளில் பயறுவகைகள் சாகுபடி செய்வதால் கூடுதல் வருமானம் பெறவும் வழிசெய்கிறது. எனவே கண்டமங்கலம் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story