நெல்லை மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுக்க நடமாடும் மருத்துவ வாகனம் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
நெல்லை மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவ வாகனத்தை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவ வாகனத்தை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
நடமாடும் மருத்துவ வாகனம்
நெல்லை மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க 19 யூனியன்களுக்கு மருத்துவ குழுவினர் கொண்ட தலா 3 வாகனங்கள் வீதம் 57 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வாகனத்தில் விழிப்புணர்வு தொலைகாட்சி பெட்டி, ஆக்சிஜன் சிலிண்டர், பரிசோதனை கருவிகள், மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் ஒரு டாக்டர், நர்ஸ், மருத்துவ உதவியாளர் ஆகியோரும் இடம்பெற்று உள்ளனர்.
இந்த நடமாடும் மருத்துவ வாகன தொடக்க விழா நேற்று பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காய்ச்சல் குறைவு
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் சென்ற ஆண்டை விட குறைவாகவே உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் 5 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். மேலும் 15 பேர் மட்டுமே பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 748 பேர் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 190 பேர் தடுப்பு பணிகளை கண்கானித்து வருகின்றனர்.
எல்லா அரசு அலுவலகங்களிலும் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று டெங்கு நோய் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு காய்ச்சல் தடுப்பு சோதனைகள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவர் தலைமையில் பள்ளி சிறார் நல குழுவால் மருத்துவம் அளிக்கப்படுகிறது.
கொசுப்புழு ஒழிப்பு பணி
சுகாதாரத்துறை மற்றும் அனைத்்து ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினால் மொத்த குப்பை அகற்றப்படுகிறது. தினந்தோறும் கொசுப்புழு ஒழிப்புப் பணி மற்றும் புகைமருந்து அடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று நோய்களை தடுக்கும் மருந்துகள் மாவட்ட நிர்வாகத்திடம் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் 117 தனியார் மருத்துவமனைகளும் காய்ச்சல் குறித்து தீவிர கண்காணிப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டீன் கண்ணன், சுகாதாரத்துறை மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், நெல்லை மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார், மாநகராட்சி உதவி ஆணையாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெண்கள் முற்றுகை
இந்த நிகழ்ச்சி முடிந்து கலெக்டர் ஷில்பா காரில் புறப்பட்டு சென்றார். அப்போது பாளையங்கோட்டை 22-வது வார்டு பட்டுப்பிள்ளை கோவில் தெருவை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் கலங்கலாகவும், சாக்கடை கலந்து வருவதாகவும் கூறி கலெக்டர் காரை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கொண்டு வந்த தண்ணீரை கலெக்டரிடம் காட்டி ஆவேசமாக பேசினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே கலெக்டர் ஷில்பா, அவர்களிடம் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story