பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி சாவு அறுவை சிகிச்சை செய்து எடுத்த குழந்தையும் உயிரிழந்தது


பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி சாவு அறுவை சிகிச்சை செய்து எடுத்த குழந்தையும்  உயிரிழந்தது
x
தினத்தந்தி 28 Oct 2018 6:00 AM IST (Updated: 28 Oct 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி இறந்தார். மேலும் அறுவை சிகிச்சை செய்து எடுத்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 25-க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் மட்டும் 14 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் ஏற்கனவே பன்றி காய்ச்சல் பாதிப்பால் நாகர்கோவில் சற்குணவீதியை சேர்ந்த திரேஷா பிரைட் (வயது 60) என்ற பெண் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

தக்கலை அருகே பருத்திகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் வினோ என்பவருடைய மனைவி சுகன்யா (30), தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்த சுகன்யா, பிரசவத்துக்காக கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள அவருடைய தாய் வீட்டுக்கு சென்றார்.

அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனே நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது வயிற்றில் இருந்த குழந்தையை ஆபரேஷன் மூலம் எடுத்தால் கர்ப்பிணி சுகன்யாவை காப்பாற்ற வாய்ப்பு உள்ளது என்றும், அதற்காக ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்து விடுவது என்றும் டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி சுகன்யாவுக்கு கடந்த 25-ந் தேதி ஆபரேஷன் செய்யப்பட்டது. 7 மாதமே ஆகி இருந்ததால் குழந்தை முழுமையான வளர்ச்சி இல்லாமல் இருந்தது. அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுகன்யா கடந்த 2011-ம் ஆண்டு கர்ப்பம் அடைந்திருந்தார். அப்போது அவருக்கு பிறந்த குழந்தை இறந்தது. இந்தநிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்ப்பம் தரித்த அவருக்கு, குழந்தை இறந்தது சுகன்யா குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் சுகன்யாவை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் என்று டாக்டர்களிடம் குடும்பத்தினர் முறையிட்டனர்.

எனவே சுகன்யாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் சுகன்யாவும் பரிதாபமாக இறந்தார். பன்றி காய்ச்சல் பாதிப்பில் கர்ப்பிணியும், அவரை காப்பாற்றும் முயற்சியில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையும் பலியான சம்பவம் தக்கலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story