டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 13 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்


டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 13 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Oct 2018 4:30 AM IST (Updated: 28 Oct 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 13 நடமாடும் மருத்துவ குழுக்களை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளின் தொடக்க நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹாலில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலையில் 13 நடமாடும் மருத்துவ குழுக்களை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் தற்போது காய்ச்சல் பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், உரிய தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதுபற்றி ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாநிலம் தழுவிய அளவில் பிரத்யேகமான ஒரு மெகா பணியை தொடங்க வேண்டும் என்று அரசு உயர் அலுவலர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இந்த பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமில் சுகாதாரத்துறையின் அனைத்துதுறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிகளின்போது ஆங்காங்கே உள்ள குப்பைகளை அகற்றுதல், வீடுகள்தோறும் சென்று தேவையற்ற பொருட்களை கண்டறிந்து அவற்றை அழிப்பது, குடிநீர் ஆதாரங்களை தூய்மைப்படுத்துதல், பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இப்பணிகளில் மாவட்டத்தில் 26 ஆர்.பி.எஸ்.கே. குழுக்கள், 13 நடமாடும் மருத்துவ குழுக்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்புரவு ஆய்வாளர்களும் மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ள 740 கொசு ஒழிப்பு பணியாளர்களும், கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனையை சேர்ந்த பயிற்சி மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 1,599 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு(2018) இதுவரை 295 பேர் மட்டுமே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் காய்ச்சல் கண்டறியப்பட்ட 246 பேர்களில் 12 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே இது போன்ற மெகா விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதன் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால் பொதுமக்கள் இப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வதோடு நமது மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து கடலூர் பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், இணை இயக்குனர்(மருத்துவ பணிகள்) கலா, துணை இயக்குனர்(சுகாதாரம்) டாக்டர் கீதா, நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராமசாமி, மாவட்ட மலேரியா அலுவலர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story