கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மேலும் 6 பேர் அனுமதி
டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மேலும் 6 பேர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் காணப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்பு கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்த சிவபிரகாசம், சிதம்பரத்தை சேர்ந்த கருணாகரன்(வயது 34), வீரமுத்து(72), குறிஞ்சிப்பாடி கோதண்டராமபுரத்தை சேர்ந்த பிரகாஷ்(39), கடலூர் கேப்பர்மலையை சேர்ந்த தர்ஷினி(8), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ரித்தீஷ்குமார்(8) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவர்கள் உடல் நலம் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில் பண்ருட்டி அருகே உள்ள மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் மகன் லோகேஷ்(4), குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கண்ணுதோப்பு பகுதியை சேர்ந்த சம்பூர்ணம்(30), புவனகிரி அருகே உள்ள மணிக்கொல்லையை சேர்ந்த ரொமான்சியா(13), நெய்வேலி, 30-வது வட்டத்தை சேர்ந்த நிக்காஷ்(35), வல்லம்படுகையை சேர்ந்த மணிமேகலை(50), சாத்தங்குப்பத்தை சேர்ந்த குமாரி(35) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, சாதாரண காய்ச்சலை தவிர, டைபாய்டு, மலேரியா காய்ச்சலாக இருந்தாலும் 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும். எனவே அதிக நாட்கள் காய்ச்சல் இருப்பதால் ஒருவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்று கூற முடியாது. நோய் அறிகுறிகள் காணப்பட்டவரின் எலிசா ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்த பின்னர்தான் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியும். மேலும் டெங்கு வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உப்புசர்க்கரை கரைசல், நிலவேம்பு குடிநீர், கஞ்சி, சுடு தண்ணீர் ஆகியவை வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அவர்களின் கருத்துகள் பதிவேடுகள் மூலம் பதிவுசெய்யப்படுகிறது. டெங்கு வார்டு கடந்த 23-ந் தேதி அமைக்கப்பட்டது. இங்கு அனுமதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர் என்றார்.
Related Tags :
Next Story