ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி


ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 27 Oct 2018 10:30 PM GMT (Updated: 27 Oct 2018 8:37 PM GMT)

ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி,

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் பேட்ரிக்(வயது 54) தொழிலதிபர். இவர் கடந்த 2016–ம் ஆண்டு தனது உறவினர்கள் 2 பேரை புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க விரும்பினார். இதற்காக அப்போது நடந்த நுழைவுத்தேர்வு எழுதினர். அதில் அவர்கள் 2 பேருக்கும் குறைவான மதிப்பெண்கள் இருந்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே பேட்ரிக் அவர்கள் 2 பேரையும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க முடிவு செய்தார். இதற்காக அவர் புதுவை வந்து பலரை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த வசந்தகுமார் பட்டி, சுல்தான்பேட்டையை சேர்ந்த தனசேகரன் ஆகியோருடன் பேட்ரிக்கிற்கு பழக்கம் ஏற்பட்டது. மேலும் அவர்கள் 2 பேரும் புதுவை ஆசிரமத்தில் வேலை செய்வதாகவும், தங்களுக்கு ஜிப்மர் மருத்துவக்கல்லூரியின் அப்போதைய இயக்குனரை தெரியும் என்றும் அறிமுகம் செய்து கொண்டனர். மேலும் ரூ.60 லட்சம் பணம் கொடுத்தால் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் வாங்கி தருவதாக தெரிவித்தனர்.

இதனை உண்மை என்று நம்பிய பேட்ரிக் அவர்களிடம் 6 தவணையாக ரூ.60 லட்சம் கொடுத்தார். அந்த பணத்தை நெல்லித்தோப்பில் உள்ள ஆசிரமத்திற்கு சொந்தமான இடத்தின் வாசலில் வைத்து கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் 2 பேரும் பேட்ரிக்கின் உறவினர்கள் 2 பேருக்கும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் வாங்கி கொடுக்கவில்லை.

உடனே பேட்ரிக் அவர்களை தொடர்பு கொண்டு தான் கொடுத்த ரூ.60லட்சம் பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பேட்ரிக் இது குறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதற்கிடையே அவர்கள் 2 பேரும் ஆசிரம பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பேட்ரிக் இது தொடர்பாக புதுச்சேரி 2–வது குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் செய்தார். மனுவை நீதிபதி தனலட்சுமி விசாரணை நடத்தி புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் படி உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் இது தொடர்பாக வசந்தகுமார் பட்டி, தனசேகரன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அவர்கள் 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story