காங்கிரஸ் அரசை செயல்படவிடாமல் கவர்னர் தடுக்கிறார் - நாராயணசாமி குற்றச்சாட்டு


காங்கிரஸ் அரசை செயல்படவிடாமல் கவர்னர் தடுக்கிறார் - நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Oct 2018 5:00 AM IST (Updated: 28 Oct 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் அரசை செயல்படவிடாமல் கவர்னர் தடுக்கிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் கவர்னருக்கு என்று தனி அதிகாரம் கிடையாது. ஆனால் கவர்னர் தன்னிச்சையாக அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசுக்கு எதிராக தினமும் செயல்பட்டு வருகிறார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் நிர்வாக உரிமை உள்ளது. அமைச்சரவையின் முடிவு இறுதியானது. அரசின் நிர்வாகத்தில் கவர்னர் தலையிட கூடாது, அதிகாரிகளை அழைத்துப் பேசவும், ஆய்வு கூட்டம் நடத்தவும் அதிகாரம் இல்லை.

பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிடலாம். ஆனால் அங்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க அதிகாரமில்லை. கோப்புகளை கேள்வி கேட்டு திருப்பி அனுப்பவும், கவர்னர் மாளிகையிலேயே தொடர்ந்து வைத்திருக்கவும் அதிகாரமில்லை என்று தொடர்ந்து 2 ஆண்டாக கவர்னருக்கும், மத்திய உள்துறைக்கும் பலமுறை கடிதம் எழுதி உள்ளேன். ஆனால் மத்திய உள்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் நிர்வாக விதிமுறையின்படி அமைச்சர் அனுப்பும் கோப்புகளில் விளக்கம் வேண்டும் என்றால் எழுத்துப்பூர்வமாக செயலாளருக்கு அனுப்பி, அமைச்சரிடம் இருந்து பதில் பெறலாம். அதிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அந்த கோப்பை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம் ஆகிய 2 அதிகாரங்கள்தான் கவர்னருக்கு உள்ளது.

ஆனால் இந்த 2 அதிகாரத்தையும் தாண்டி புதுவை கவர்னர் கிரண்பெடி சர்வாதிகாரி போல செயல்படுகிறார். இது முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்படுத்தும் இழுக்கு அல்ல. அவர்களை தேர்வு செய்ய வாக்களித்த மக்களை இழிவுபடுத்துவதாகும். இது குறித்து பிரதமர் மோடியிடம் புகார் செய்தும், காங்கிரஸ் அரசை பழிவாங்கும் நோக்கோடு அவர் கவர்னர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதுவை பட்ஜெட்டில் பொதுத்துறை, கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ.336 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் மூலமாகத்தான் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதை காலத்தோடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டு கோப்பு தயாரித்து கவர்னரிடம் அனுப்பினால் அவர் பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புகிறார். இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்காத நிலையை உருவாக்கி உள்ளார். அது மட்டுமல்லாமல் உண்மைக்கு புறம்பான தகவல்களை தொடர்ந்து கவர்னர் சொல்லி வருகிறார்.

இதற்கிடையே சம்பளம் கேட்டு தொழிலாளர்கள் தொடர்ந்து போராடும் நிலை ஏற்பட்டது. தொழிற்சங்க தலைவர்கள் கவர்னரை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அவர் என்னிடம் கோப்பு ஏதுமில்லை என்று உண்மைக்கு புறம்பாக கூறினார். இதனை தொடர்ந்து சங்க தலைவர்கள் என்னை சந்தித்து பேசினர். அப்போது தான் 2018-19-ம் ஆண்டு பட்ஜெட்டில் துறைகளுக்கு மானியமாக வழங்கப்பட்ட நிதி குறித்து ஆதாரத்தோடு எடுத்து கூறினேன்.

தொழிற்சங்க தலைவர்கள் கவர்னரை சந்தித்து பேசியபோது, பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்று கவர்னர் கேட்டு ஏளனம் செய்துள்ளார். மேலும் புதுவை மாநிலத்திற்கு மத்திய அரசு 60 சதவீதம் மானியம் தருவதாகவும் கூறியுள்ளார்.

புதுவையில் கடந்த பட்ஜெட் ரூ.7,830 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாநில அரசின் வருவாய் ரூ.4,500 கோடி, மீதியுள்ள தொகையில் வெளிச்சந்தைகளில் வாங்கப்படும் கடன்கள் போக ரூ.1,460 கோடிதான் மத்திய அரசு மானியமாக தருகிறது. எனவே மத்திய அரசின் மானியம் 26 சதவீதம்தான். 60 சதவீதம் மானியம் என புதுச்சேரி மக்கள் மத்தியில் பொய்யான தகவலை கவர்னரும், பா.ஜ.க. தலைவரும் கூறக்கூடாது.

மத்திய அரசின் மானியம் 60 சதவீதம் என்பதற்கு கவர்னர் ஆதாரம் தர முடியுமா?. 7-வது ஊதியக்குழுவின் நிலுவை தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசு புதுவைக்கு கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 6-வது ஊதியக்குழுவின் நிலுவை தொகையையே இன்னும் மத்திய அரசு புதுவைக்கு தரவில்லை.

வாய்க்கால் தூர்வாரும் ஒப்பந்ததாரர்களுக்கும், சமூக பங்களிப்பு நிதி தரும் நிறுவனங்களுக்கும் கவர்னர் மாளிகை இணைப்பாக இருக்கும் என கூறியிருந்த அறிவிப்பையும், வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்காக நியமன எம்.எல்.ஏ. என்று சொல்லப்படும் செல்வகணபதி தனது சம்பளத்தை கொடுத்த புகைப்படத்தையும் கவர்னர் தனது டுவிட்டரில் இருந்து நீக்கிவிட்டார். இதற்கு காரணம் என்ன? உண்மையை மூடி மறைக்கவே இந்த பதிவுகள் அழிக்கப்பட்டு உள்ளன.

பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு அங்காடி நடத்தவும், தொழிலாளர்களின் சம்பளத்திற்காக ரூ.7½ கோடி கேட்டு அதன் தலைவர் அரசுக்கு கோப்பு அனுப்பினார். வழக்கமாக வாரியங்கள், கழகங்கள் அரசிடம் பணம் பெறுவதும், அதனை திருப்பி கொடுப்பதும் வாடிக்கையான ஒன்று தான். ஆனால் அந்த கோப்புக்கு அனுமதி தரமாட்டேன் என்று கவர்னர் மறுத்து விட்டார். இதனால் தான் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு அங்காடி நடத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசை செயல்படவிடாமல் தடுக்கும் நோக்கில் கவர்னர் செயல்படுகிறார். அனைத்து எல்லைகளையும் மீறி சர்வாதிகாரி போல தனக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று கவர்னர் கிரண்பெடி செயல்பட்டு வருகிறார். புதுவை அரசு சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்க நேற்றுதான் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும். இல்லையெனில் பாதிப்பு அவர்களுக்குத்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story