குடிநீர் கேட்டு கலெக்டர் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிநீர் கேட்டு கலெக்டர் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 Oct 2018 10:45 PM GMT (Updated: 27 Oct 2018 8:48 PM GMT)

சுகாதாரத்துறை சார்பில் சுகாதார மைய தொடக்க விழா நடைபெற்றது. குடிநீர் கேட்டு கலெக்டர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே நம்பம்பட்டியில் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார மைய தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும், மத்திய இணை மந்திரி மணப்பாறைக்கு தனது காரில் புறப்பட்டு சென்று விட்டார். மாவட்ட கலெக்டர் கணேஷ், அரசு அதிகாரிகளுடன் நம்பட்டியில் இருந்து தனது காரில் விராலிமலைக்கு வந்து கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை அருகே உள்ள கோடாலிக்குடி பொதுமக்கள் குடிநீர் கேட்டு விராலிமலை-மணப்பாறை சாலையில் வந்து கொண்டிருந்த கலெக்டரின் காரை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கலெக்டர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் குடிநீர் பிரச்சினை உடனடியாக தீர்க்கபடும் என உறுதியளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் காரையும் பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர். ஆனால் சுதாரித்து கொண்ட அமைச்சரின் கார் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. குடிநீர் கேட்டு கலெக்டர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story