அமலாக்கப்படைக்கு பதிலாக பெங்களூரு மாநகராட்சி பாதுகாப்பு படை கர்நாடக அரசு முடிவு


அமலாக்கப்படைக்கு பதிலாக பெங்களூரு மாநகராட்சி பாதுகாப்பு படை கர்நாடக அரசு முடிவு
x
தினத்தந்தி 28 Oct 2018 4:00 AM IST (Updated: 28 Oct 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சியின் அமலாக்கப்படைக்கு பதிலாக பாதுகாப்பு படையை உருவாக்க கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சியின் அமலாக்கப்படைக்கு பதிலாக பாதுகாப்பு படையை உருவாக்க கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாநகராட்சி பாதுகாப்பு படை

கர்நாடகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு, ஊழலில் ஈடுபடும் அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் லோக் ஆயுக்தாவுக்கு பதிலாக ஊழல் தடுப்பு படையை முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா கொண்டு வந்தார். இதனால் லோக் ஆயுக்தா அமைப்பு தற்போது கர்நாடகத்தில் முடக்கப்பட்டு உள்ளது. பெயரளவுக்கு மட்டுமே கர்நாடகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், லோக் ஆயுக்தாவை போலவே பெங்களூரு மாநகராட்சியின் அமலாக்கப்படைக்கு பதிலாக மாநகராட்சி பாதுகாப்பு படையை உருவாக்க கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரு மாநகராட்சி அமலாக்கப்படை, மாநகராட்சி மற்றும் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட அரசு துறைகளில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது வழக்கம்.

அடுத்த மாதம் முதல் செயல்படும்

ஆனால் அரசு புதிதாக உருவாக்க முடிவு செய்துள்ள பெங்களூரு மாநகராட்சி பாதுகாப்பு படை போலீசாரால், மாநகராட்சி உள்ளிட்ட அரசு துறைகளில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த முடியாது.

அதே நேரத்தில் அமலாக்கப்படையில் பணியாற்றும் போலீசாரே, மாநகராட்சி பாதுகாப்பு படையில் பணியாற்ற உள்ளனர். அரசு புதிதாக உருவாக்க உள்ள மாநகராட்சி பாதுகாப்பு படை அடுத்த மாதம் (நவம்பர்) செயல்பட இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு

இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி பாதுகாப்பு படையை அரசு உருவாக்க முடிவு செய்திருப்பதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் லோக் ஆயுக்தா அமைப்பை முடக்கியது போல பெங்களூரு மாநகராட்சியின் அமலாக்கப்படையை முடக்கவும், அதன் அதிகாரத்தை பறிக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாகவும் பா.ஜனதவினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.


Next Story