சென்னை தியாகராயநகரில் சிறப்பு பாதுகாப்பு தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆளில்லா விமானம்


சென்னை தியாகராயநகரில் சிறப்பு பாதுகாப்பு தீபாவளி திருடர்களை கண்காணிக்க ஆளில்லா விமானம்
x
தினத்தந்தி 28 Oct 2018 5:15 AM IST (Updated: 28 Oct 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, 

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 6-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள், நகைகள் மற்றும் பட்டாசு போன்றவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.

தீபாவளி பொருட்களை வாங்குவதற்காக சென்னை தியாகராயநகரில் வழக்கம்போல மக்கள் கூட்டம் அலைமோதும். மாம்பலம், பாண்டிபஜார் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி தீபாவளி திருடர்கள் பொதுமக்களிடம் இருந்து நகைகள், பணம் மற்றும் பொருட்களை பறித்துச் சென்றுவிடக்கூடும். தீபாவளி கூட்ட நெரிசலில் புகுந்து கொள்ளையடிப்பதற்காக தமிழகத்தில் வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தீபாவளி திருடர்கள் சென்னையில் முகாமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு பாதுகாப்பு

தீபாவளி திருடர்களிடமிருந்து பொதுமக்களை காக்க சென்னை தியாகராயநகரில் ரெங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, தியாகராய சாலை உள்ளிட்ட பகுதிகளில் 750 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 காவல் உதவி மையங்களும் செயல்படும். 3 சிறிய காவல் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளின் முகத்தை வைத்து அடையாளம் காட்டக்கூடிய நவீன 10 கண்காணிப்பு கேமராக்களும் முக்கியமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

ஆளில்லா விமானம்

மேலும் உச்சக்கட்ட பாதுகாப்பாக, தீபாவளி திருடர்களை கண்காணிப்பதற்காக ஆளில்லா குட்டி விமானம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள ஆளில்லா குட்டி விமானத்தை மாம்பலம் போலீசார் வாங்கி உள்ளனர்.

அந்த ஆளில்லா குட்டி விமானம் தியாகராயநகரில் முக்கியமான பகுதிகளில் பறக்க விடப்படும். ரிமோட் மூலம் அந்த விமானத்தை இயக்கலாம். அந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா படம் பிடிக்கும் காட்சிகளை மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்து டி.வி. திரையில் பார்க்க முடியும்.

கேமரா பொருத்திய சீருடை

மேலும் கேமரா பொருத்திய சீருடையை 15 ரோந்து போலீசாருக்கு வழங்கி உள்ளனர். அந்த சீருடையில் நவீன ரக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் ஜி.பி.எஸ். வசதி உள்ளது. அதில் அதிக வெளிச்சம் தரக்கூடிய டார்ச்லைட் பொருத்தப்பட்டிருக்கும். கைபேசி செயலியும் அந்த சீருடையில் உள்ளது.

அந்த சீருடை கேமரா படம் பிடிக்கும் காட்சிகளும் மாம்பலம் போலீஸ் நிலைய டி.வி. திரையில் தெரியும். கேமரா பொருத்திய சீருடை அணிந்து ரோந்து செல்லும் போலீசார் எந்தெந்த இடத்திற்கு செல்கிறார்கள் என்பதையும் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் தீபாவளி பண்டிகையையொட்டி தியாகராயநகர் பகுதியில் முதன்முதலாக செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை நேரடியாக சென்று பார்வையிட்டார். அவர் தீபாவளிக்காக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறைகளையும் திறந்து வைத்தார்.

ஆளில்லாத குட்டி விமானத்தின் பணியையும் அவர் ‘ரிமோட்’ மூலம் இயக்கி வைத்தார். கேமரா பொருத்திய சீருடைகளை 15 ரோந்து போலீசாருக்கு அவர் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “இந்த சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் பொதுமக்களின் பொருட்கள் பாதுகாக்கப்படும். பொதுமக்களும் தைரியமாக தியாகராயநகர் பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்லலாம். கேமரா பொருத்திய சீருடையில் வலம்வரும் ரோந்து போலீசாரின் பாதுகாப்பு பணி முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், இணை கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் அரவிந்தன், உதவி கமிஷனர் செல்வம், மாம்பலம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story