கணவர் வேலைக்கு செல்லாததால் விரக்தி: காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


கணவர் வேலைக்கு செல்லாததால் விரக்தி: காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 28 Oct 2018 3:39 AM IST (Updated: 28 Oct 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

தனது காதல் கணவர், சரிவர வேலைக்கு செல்லாததால் விரக்தி அடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது 33). இவருடைய மனைவி அருள்பிரியா(31). இவர்கள் இருவரும் 2½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

திருமணத்துக்கு பிறகு நந்தகுமார் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருள்பிரியா, வேலைக்கு செல்லாவிட்டால் நான் தீக்குளிப்பேன் என்று கூறி அடிக்கடி தனது கணவரை மிரட்டி வந்து உள்ளார். ஆனாலும் அவர் வேலைக்கு செல்லாததால் மனம் உடைந்து காணப்பட்டார்.

தீக்குளித்து தற்கொலை

இந்தநிலையில் நேற்றுமுன்தினமும் தனது கணவரை வேலைக்கு செல்லும்படி கூறிய அருள்பிரியா, திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அருள்பிரியா பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருள்பிரியாவுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story