பிளாஸ்டிக்குக்கு பதிலான மாற்று பொருள் கண்காட்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள் குறித்த 2 நாள் கண்காட்சி தொடங்கியது.
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலான மாற்று பொருள் குறித்த 2 நாள் கண்காட்சி சேலையூரில் உள்ள தாம்பரம் நகராட்சி பள்ளியில் நேற்று தொடங்கியது.
கண்காட்சியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கிவைத்தார். பின்னர் கண்காட்சியில் இடம்பெற்று இருந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருள்களான துணி, சணல் பை, பாக்கு மட்டை, மக்காச்சோளம், காகித கூழ் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட தட்டுகள், குடிநீர் பாட்டில் உள்ளிட்டவைகளை ஒவ்வொரு அரங்குகளாக சென்று பார்வையிட்டார்.
அப்போது அந்த மாற்று பொருட்கள் தயாரிக்கப்படும் முறைகள் உள்ளிட்ட விவரங்களை அதன் தயாரிப்பாளர்களிடம் கேட்டறிந்தார். காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இந்த கண்காட்சி நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
இதில் தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயக்குமார், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன், மண்டல பொறியாளர் முருகேசன், நகராட்சி கமிஷனர்கள் கிருஷ்ணமூர்த்தி (தாம்பரம்), கருப்பையாராஜா (பல்லாவரம்), நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுசெல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பட் அருள்ராஜ், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
Related Tags :
Next Story