கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Oct 2018 4:01 AM IST (Updated: 28 Oct 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் கிராமத்தை இணைக்கும் சுரங்கப்பாதை பணி பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பணிகள் நடைபெற்று சுமார் 75 சதவீத பணிகள் முடித்துவிட்ட நிலையில் சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்த பணியை முழுமையாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிடப்பில் போடப்பட்டது

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

பல ஆண்டுகளுக்கு முன்பு கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கம் இடையே ரெயில்வே கேட் இருந்தது. இந்த கேட்டின் வழியாக தான் மாடம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வந்தனர். இந்த ரெயில்வே கேட்டை அகற்றிவிட்டு அந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

பணி தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், இன்னும் சுரங்கப்பாதை பணிகள் முழுமையாக முடியாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோரிக்கை

இதனால் இந்த சுரங்கப்பாதையின் அருகில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய் வழியாக கூடுவாஞ்சேரிக்கு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். மழை காலங்களில் இந்த கால்வாயில் அதிக அளவில் மழைநீர் செல்லும் போது பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்த முடியாது.

இதனால் 1 கிலோ மீட்டர் சுற்றி தான் கூடுவாஞ்சேரிக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story