விபத்து உயிரிழப்பை தடுக்க முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


விபத்து உயிரிழப்பை தடுக்க முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 28 Oct 2018 5:00 AM IST (Updated: 28 Oct 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலை பகுதிகளில் கூடுதல் மருத்துவமையங்கள், மேம்பாலங்கள் மூலம் விபத்து உயிரிழப்பை தடுக்க, முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கோவை,

தமிழ்நாட்டில் விபத்து உயிரிழப்பை தடுக்க நெடுஞ்சாலைப்பகுதிகளில் மருத்துவ சிகிச்சை மையங்கள் மற்றும் மேம்பாலங்கள் உள்ளிட்ட முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சாலை விபத்துக்களினால் உண்டாகும் உயிரிழப்பு, உடல் ஊனம் ஆகியவற்றை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த கோவையில் உயிர் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் தொடக்க விழா கோவை கொடிசியாவில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி உயிர் அமைப்பை தொடங்கி வைத்தார். இந்த அமைப்பின் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு வரவேற்று பேசினார். நிர்வாக அறங்காவலர் கங்கா மருத்துவமனை டாக்டர் ராஜசேகரன் அறிமுக உரையாற்றினார். தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உயிர் அமைப்பை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

உயிரின் அருமையை பற்றி மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு எடுத்துரைத்து, விபத்துகள் இல்லா கோவை மாநகரை உருவாக்க அரசுடன் கைகோர்த்து செயல்படுவதற்காக கோவையிலுள்ள சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட “உயிர்” என்ற தன்னார்வ அமைப்பினை துவக்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் நடந்து கொள்வதும், மிதமிஞ்சிய வேகமும், மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதும் தான் கோவையில் நிகழும் 70 சதவீத விபத்துகளுக்கு காரணம் என்கிறது ஒரு புள்ளி விவரம். தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட்டுகளை மாட்டிக் கொள்வது, வாகனங்களை ஓட்டும்போது செல்போனில் பேசாமல் இருப்பது போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்களைக்கூட கருத்தில் கொள்ளாமல், பயணிகள் அலட்சியம் காட்டுவது பல விபத்துகளுக்கு வழிவகுக்கிறது.

வாகனங்களை இயக்குபவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்தால் மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும். சாலை பாதுகாப்பு விதிகளும், சாலை பொறுப்புணர்ச்சியும், போக்குவரத்து நடத்தையும் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி விபத்துகளே இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது தான் ‘உயிர்’ என்ற இந்த அமைப்பு. இந்த அமைப்பு, சாலை விபத்தினை தடுக்க ஒரு நூதனமான திட்டத்தினை உருவாக்கியுள்ளதாக அறிகிறேன். அதாவது கல்விக்கூடங்களில் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்த ‘குட்டி காப்ஸ்’ என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகள் வீட்டின் கண்காணிப்பு அதிகாரிகளாக செயல்படுவார்கள் எனவும், இவர்கள் பெற்றோர், உறவினர், நண்பர் ஆகியோர் சாலை விதிகளை மீறும்போது அவர்களுக்கு போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துவார்கள்.

விபத்து உயிரிழப்பை தடுக்க தமிழக அரசு முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி நெடுஞ்சாலை ரோந்து கண்காணிப்பு முறை ஏற்படுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தற்போது 272 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் இயங்கி வருகின்றன. இவை, விபத்துகளை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நேரும்போது இந்த வாகனங்கள் விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்டோரை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து உயிர்களை காப்பாற்றி வருகின்றன. இதுவரை காயமடைந்த 15,757 நபர்கள் மாநிலம் முழுவதும் இந்த நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களால் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். இவ்வாகனங்கள் அனைத்திலும் புவிசார் இருப்பிட முறைமை (ஜி.பி.எஸ்.) கருவி பொருத்தப்பட்டு, அந்தந்த மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே இவ்வாகனங்களின் இயக்கம் கண்காணிக்கப்படுகிறது.

“108” ஆம்புலன்ஸ் சேவை தமிழ்நாட்டில் கட்டணமில்லாமல் வெற்றிகரமாக இயக்கப்படுகிறது. இச்சேவைகள் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 926 அவசர கால ஆம்புலன்ஸ் ஊர்திகள் இயங்குகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 4,68,485 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அவசரகால இலவச 108 சேவை 7.21 கோடி மக்களுக்கு சேவையாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால பாதுகாப்பு திட்டம், பொன்னான மணித்துளிகள் கொள்கையில் கவனம் செலுத்தி, சிகிச்சை வழங்குவதற்கான காலத்தை குறைக்க அதிக கவனம் செலுத்துகிறது.    இந்த நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த ஒரு வருடத்தில் பதிற்குறிப்பு நேரம் சராசரியாக நகர்ப் புறங்களில் 13 நிமிடமாகவும், ஊரகப் பகுதிகளில் 17 நிமிடமாகவும், சாலை போக்குவரத்து விபத்துகளுக்கு 13 நிமிடமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

விபத்து சிகிச்சை மருத்துவ மையங்களின் செயல்பாட்டினால், 2013-ம் ஆண்டு முதல் மார்ச் 2018 வரை 23,949 நபர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. கூடுதலாக 10 அரசு மருத்துவமனைகளில் இம்மையங்கள் நிறுவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய உயர்நிலை மருத்துவமனைகளில் விபத்து சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, கரூர், கிருஷ்ணகிரி, கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலைக்காய மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மற்றும் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் விபத்து சிகிச்சை மையங்கள் ரூ.28 கோடியே 30 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட உள்ளன. காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் விபத்து சிகிச்சை மையம் துவக்கப்பட உள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்கனவே உள்ள விபத்து சிகிச்சை மையங்களை தரம் உயர்த்துதல் மற்றும் விபத்து சிகிச்சை மையங்களை துவக்குதல் போன்ற பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் இந்த ஆண்டில் விபத்துகளுக்கான மரண விகிதம் 8.27லிருந்து 4.89 ஆகவும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் மரண விகிதம் 5.51-லிருந்து 2.72 ஆகவும் குறைந்துள்ளது.

விபத்துகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்குவதற்காக ரூ.215 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தி தருவதிலும், தமிழ்நாடு, இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருவதின் காரணமாக ‘நிதி ஆயோக்’ வெளியிட்டுள்ள ‘சுகாதாரமான மாநிலம்- முற்போக்கு இந்தியா” அறிக்கையில் மூன்று முன்னிலை மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளதுடன், விபத்துகளும் தடுக்கப்பட்டு உள்ளது. விபத்தில்லா நாட்டினை உருவாக்குவதற்கு அரசுடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் உங்களை போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட வேண்டும்.

விபத்து பற்றிய குறும்படங்களை ஆங்காங்கே திரையிடுதல், விளம்பர அறிக்கைகளை மக்களிடையே வினியோகம் செய்தல், விபத்தினை கண்டவுடன், பாதிக்கப்பட்டவர்களை உடனே மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லுதல் போன்ற பணிகளை அரசுடன் நிதானமாகவும், கவனமாகவும் பணியாற்றினால் நாம் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெறலாம்.

“உயிர்” அறக்கட்டளையின் சார்பாக ரூ.4½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு உபகரணங்கள் வாங்கி, இங்கே வைத்திருக்கிறோம் என்ற அந்த தகவல்களையெல்லாம் இங்கே சொன்னார்கள். உங்களுக்கு உறுதுணையாக அரசு செயல்படும். ஏனென்று சொன்னால், சாலை சந்திப்புகளில் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆகவே, அப்படி சாலை சந்திப்புகளில் எல்லாம் உயர்மட்டப்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கோவை அவினாசி ரோட்டில் 9.5 கிலோமீட்டருக்கு உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப் படும். அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பணி முடிந்தவுடன், பாலம் அமைக்கின்ற பணி துவங்கப்படும்.

கோவை மாநகரத்திற்கு உள்ளே வாகனங்கள் வராமலேயே கோவை புறநகர் பகுதியில் கோவை கிழக்கு புறவழிச்சாலை, கோவை மேற்கு புறவழிச்சாலை என்று 2 புறவழிச்சாலைகள் அமைப்பதற்கும் தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான நிலம் எடுக்கின்ற பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட மாநிலத்தில் இருக்கின்ற 40 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்று தேர்வு செய்து, மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசு முதல்கட்டமாக எடுத்துக்கொண்ட சாலைகளில், 12 சாலைகளில் உடனடியாக அந்தப்பணி துவங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், எஞ்சிய சாலைகளையும் விரைவாக பணிக்கு எடுத்துக்கொள்வதற்கு மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு பகுதிகளிலிருந்து பஸ்கள் வருகின்றன. நகரத்தின் மையப்பகுதிகளில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பஸ்கள் எல்லாம் நகரத்திற்குள்ளிருந்து வெளியே வரும்பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. அதையும் குறைப்பதற்காக பஸ் முனையம் அமைக்க மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். அது மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது. அது விரைவிலே துவங்கும். இதன் மூலம் நகரங்களிலே போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைகின்ற வாய்ப்பு இருக்கிறது.

சென்னையிலிருந்து சேலம் வரை 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து, மத்திய அரசும் அதற்கு அனுமதியளித்து, அதற்குண்டான நில அளவீடுகள் பணி முடிவடைந்துவிட்டது. இதுகுறித்து நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தினாலே சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. சேலத்தில் மட்டுமல்ல, கோவைக்கு வருவதற்கும் அது வசதியாக இருக்கும். சென்னையிலிருந்து கோவைக்கு வரவேண்டுமென்றால், 77 கிலோ மீட்டர் மிச்சமாகின்றது. மேலும் விபத்துக்கள் குறைகின்றன, நேரம் மிச்சப்படுகிறது. இவையெல்லாம் இந்த சாலை அமைப்பதின் மூலம் ஏற்படுகின்ற நன்மை என்பதையும் இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, அந்தத் திட்டத்தையும் தமிழக அரசால் விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த “உயிர்” அறக்கட்டளை மக்களுக்கு நன்மை செய்கின்ற ஒரு அறக்கட்டளையாக, கோவை மாநகர மக்களுக்கு கிடைத்திருக்கின்றது என்பதை தெரிவித்து, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அவர்கள் தொண்டாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

உயிர் அமைப்பின் புரவலர்களாக சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், பண்ணாரி கல்வி குழுமம் டாக்டர். பாலசுப்பிரமணியம் மற்றும் டாக்டர் சண்முகநாதன் ஆகியோர் செயலாற்றுகிறார்கள். கோவையின் முக்கிய பிரமுகர்கள், முதன்மையான பெரு நிறுவனங்கள, தொழிலகங்கள் என பலர் இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

தொடக்க விழாவில் உயிர் அமைப்பின் உயிர் காக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு அதிகாரிகளுடன் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. கலெக்டர் ஹரிகரன், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன், வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து உயிர் சேதம் தவிர்க்க எல்லா வகையிலும் ஒத்துழைப்போம் என கோவையின் பொது நல அமைப்புகள், தொழில் அமைப்புகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஆன்மிக அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து உறுதியேற்பு எடுத்து கொள்ளும் ஸ்ரீமஹா சங்கல்பம் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, கிருஷ்ணா கல்லூரி சேர்மன் எஸ்.மலர்விழி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், ரூட்ஸ் நிறுவனர் ராமசாமி, கவிதாசன், ரவி ஷாம், கொடிசியா தலைவர் ராம மூர்த்தி, விஜய் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story