தஞ்சையில், தடை செய்யப்பட்ட பகுதியில் சென்றதால் ரெயில்வே கீழ்ப்பால இரும்பு தடுப்பு மீது லாரி மோதியது போக்குவரத்து பாதிப்பு; டிரைவர் கைது


தஞ்சையில், தடை செய்யப்பட்ட பகுதியில் சென்றதால் ரெயில்வே கீழ்ப்பால இரும்பு தடுப்பு மீது லாரி மோதியது போக்குவரத்து பாதிப்பு; டிரைவர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2018 11:00 PM GMT (Updated: 27 Oct 2018 10:59 PM GMT)

தஞ்சையில், தடை செய்யப்பட்ட பகுதியில் சென்றதால் ரெயில்வே கீழ்ப்பால இரும்பு தடுப்பு மீது லாரி மோதியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே ரெயில்வே கீழ்ப் பாலம் உள்ளது. பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்களும், பட்டுக்கோட்டை, பேராவூரணி, நாகை பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் ரெயில்வே கீழ்ப்பாலம் வழியாக தான் வந்து செல்கின்றன. இப்படி செல்லும் வாகனங்கள் ரெயில்வே தண்டவாளத்தின் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக இருபுறமும் இரும்பினால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்லும்போது இரும்பு தடுப்புகள் மீது மோதும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. பாலம் பராமரிப்பு பணிக்காக கீழ்ப்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வாகனங்கள் அந்த வழியாக தான் சென்று வருகின்றன. இந்தநிலையில் தஞ்சை தொம்பன்குடிசை பகுதியில் உள்ள பழைய இரும்பு குடோனில் இருந்து பழைய அட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருச்சி அருகே சோழகன்பட்டியில் உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு நேற்றுகாலை புறப்பட்டது.

இந்த லாரியை தஞ்சை பர்மாகாலனியை சேர்ந்த விஜயகுமார்(வயது40) ஓட்டி சென்றார். தஞ்சை மேரீஸ்கார்னர் ரெயில்வே கீழ்ப்பாலம் அருகே லாரி வந்தது. லாரியில் எடை அதிகமாக இருந்தபோதிலும் ரெயில்வே கீழ்ப்பாலத்தின் வழியாக செல்ல முடியுமா? முடியாதா? என்பதை ஆராய்ந்து பார்க்காமல் அதே வழியாக லாரியை இயக்கினார்.

அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் கனரக வாகனங்கள் மோதாமல் இருப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள இரும்பினால் ஆன தடுப்பு மீது லாரியின் மீது அடுக்கி வைத்திருந்த அட்டைகள் மோதின. இதை பார்த்த டிரைவர், லாரியை பின்நோக்கி எடுக்க முயற்சி செய்தபோது தடுப்பு மேல் பகுதி பெயர்ந்து லாரியின் முன்பகுதியில் தொங்கி கொண்டிருந்தது. இதனால் லாரியை அப்படியே டிரைவர் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.

இதனால் ரெயில்வே கீழ்ப்பாலத்தின் வழியாக மற்ற வாகனங்களால் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயில்வே கீழ்ப்பாலம் பகுதியில் இரும்பினால் ஆன தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்தினால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

Next Story