தஞ்சை நகரில் உரிமம் இன்றி செயல்பட்ட 8 டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் திடீர் சோதனை ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்
தஞ்சை நகரில் உரிமம் இன்றி செயல்பட்ட 8 டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் 146 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 18 கடைகளில் மட்டுமே உரிமத்துடன் கூடிய பார்கள் செயல்பட்டு வருகின்றன. மற்ற கடைகளின் அருகே உரிமம் இன்றி பார்கள் செயல்படுவதுடன், இங்கு சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனையும் நடந்து வருகிறது. இதுகுறித்து கலால்துறை, டாஸ்மாக் மேலாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
அதன்பேரில் உதவி ஆணையர்(கலால்) தவச்செல்வம் தலைமையில் கோட்ட கலால் அலுவலர் வெங்கடேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் சரவணன், உதவியாளர் அருள்சாமி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரசு, ஏட்டுகள் குருமாணிக்கம், பழனிவேல், டாஸ்மாக் அலுவலக உதவியாளர்கள் ராஜ்மோகன், வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் தஞ்சை காவேரி நகர், புதிய பஸ் நிலையம், பாலாஜி நகர், காவேரி சிறப்பு அங்காடி எதிரில், ரெயிலடி, சிரேஜ்சந்திரம் ரோடு, வடக்குவாசல், கரந்தை போக்குவரத்து பணிமனை அருகே என 8 இடங்களில் உரிமம் இன்றி செயல்பட்ட டாஸ்மாக் பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 4 பார்களில் புதுச்சேரி மாநில மதுபானங்களும், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களும் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 93 பீர்பாட்டில்களையும், 297 மதுபாட்டில்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும் குளிர்சாதன பெட்டி, 3 கியாஸ் சிலிண்டர்கள், குளிர்பானங்கள், ஜெனரேட்டர், மின்விசிறி, தண்ணீர் பாட்டில்கள், நாற்காலிகள், தின்பண்டங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
தஞ்சை மாவட்டம் முழுவதும் உரிமம் இன்றி செயல்படும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூடவில்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய உரிமம் பெற்று யார் வேண்டுமானாலும் பார்களை நடத்த முன்வரலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே அறிந்த பணியாளர்கள் பார்களில் இருந்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து தஞ்சை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story