திருவாடானையில் சேதுபதி மன்னர்கள் கால ஓவியங்கள்


திருவாடானையில் சேதுபதி மன்னர்கள் கால ஓவியங்கள்
x
தினத்தந்தி 29 Oct 2018 4:15 AM IST (Updated: 29 Oct 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானையில் சேதுபதி மன்னர்கள் கால ஓவியங்கள் இருப்பது மரபு நடை நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

தொண்டி,

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளும் வகையில் மரபுநடை நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. இதன்படி திருவாடானையில் மரபுநடை நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரையும் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு தலைமை தாங்கி பேசியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை யூனியனில் மட்டும் கோட்டை என முடியும் 28 ஊர்கள் உள்ளன. இவை நெல் விளையும் கோட்டை என்பதால் இப்பெயர் பெற்றுள்ளன. வணிகர் தொடர்பால் இப்பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான சிவன் கோவில்கள் உள்ளன.

இங்கு திருஞானசம்பந்தர் பாடல்பெற்ற ஆடானை நாயகர் கோவில் உள்ளது. தேவாரப்பாடல்களிலும், கல்வெட்டுக்களிலும் இந்த ஊர் ஆடானை என்றே கு றிக்கப்படுகிறது. களப்பிரர், பாண்டியர் ஆட்சி காலத்தில் முத்தூற்றுக்கூற்றம் எனும் நாட்டுப்பகுதியில் இந்த ஊர் இருந்துள்ளது. மத்திய தொல்லியல் துறை படி எடுத்த நான்கு கல்வெட்டுகளில் 2 பிற்காலப் பாண்டியர் காலத்தையும், 2 சேதுபதி மன் னர்கள் காலத்தையும் சேர்ந்தவை.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கோவிலுக்கு நிலக்கொடை வழங்கியதையும், நெல் தானமாக வழங்கப்பட்டதையும் இவை தெரிவிக்கின்றன. தளவாய் சேதுபதியின் பிரதிநிதியான திருமலையன் இக்கோவில் பூஜைக்காக ஒவ்வொரு கிராமமும் வரி கொடுக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார். இந்த வரி கொடுக்காமல் இருக்க கைக்கூலி வாங்கியவர்களை கடுமையாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. முத்து வைரவநாத சேதுபதி காலத்தில் இந்த கோவில் எதிரில் சூர்ய புஷ்கரணி எனும் கு ளம் வெட்டிய தகவலை தெரிவிக்கிறது. மத்திய தொல்லியல் துறை பதிவு செய்த க ல்வெட்டுகள் எதுவும் தற்போது அங்கு இல்லை. சேதுபதி மன்னர்கள் கால ஓவியங்கள் இங்கு உள்ளன.

சிவன் சன்னதியின் தெற்கே தரையில் ஒன்றும், அம்மன் சன்னதியின் வடக்கே தரையில் ஒன்றுமாக கல்வெட்டுகள் உள்ளன. மாஞ்சூரில் கி.பி.1296 ஆண்டை சேர்ந்த மாறவர்மன் விக்கிரபாண்டியனின் கல்வெட்டில் களப்பாளராயன் என்பவர் பெயர் காணப்படுகிறது.

மருத மரங்கள் நிறைந்த ஊர் மருதனை எனவும், உஞ்சமரங்கள் நிறைந்த பகுதி உஞ்சனை எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். முடிவில் திரு வாடானை அரசு மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரியாஸ்கான் நன்றி கூறினார்.

பின்பு புல்லுகுடி சிவன்கோவிலில் உள்ள முதலாம் சடையவர்மன் குலசேகர பாண் டியனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் 105 வரிகள் கொண்ட கல்வெட்டுகளை மாணவர்கள் வாசித்து அறிந்தனர். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கிருஷ்ணா இன் டர்நே‌ஷனல் பள்ளி, திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story