மீ டூ விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் பேட்டி
மீ டூ விவகாரத்தில் யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:–
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 5–ந்தேதி ஒருநாள் நடைதிறக்கப்பட உள்ளது. அப்போது பம்பா நதிக்கரையில் கூடி ஆலோசனை நடத்த உள்ளோம். இந்த முறை கேரள முதல்வர், அய்யப்பன் கோவிலில் பதினெட்டு படிகளில் பெண்களை ஏற வைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இதுகண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு சபரிமலையின் புனிதம் காக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும். மேலும், சபரிமலையை மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர வேண்டும். மீ டூ விவகாரத்தில் மந்திரிகளாக இருந்தாலும், நடிகர்களாக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் அவதூறு பரப்பியது தெரிந்தால் குற்றம் சாட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழக அரசும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் இந்து கோவில் வழிபாடுகள், சடங்குகள், திருவிழாக்கள் போன்றவற்றில் எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கோவில்களில் யானைகள் வைத்து பூஜை செய்வது, சமய சடங்குகள் செய்வது காலம்காலமாக நடந்து வருகிறது. இதனை எதிர்த்து ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கலாசாரம், பண்பாடு, வழிபாடு ஆகியவைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அரசு கோர்ட்டில் வழக்காட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற உள்ள இடைதேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும். ஆன்மிக அரசியல் ஒன்றுதான் தீர்வு. தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு மாற்றாக வரும் இடைத்தேர்தலில் பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க முயற்சிக்கும் கட்சிகளும், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக ஆன்மிக அரசியல் வழியில் செல்லும் நடிகர் ரஜினியை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு இந்து மக்கள் கட்சி முயற்சி எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.