பயிற்சிக்காக விடுமுறை எடுத்த வடுவூர் கபடி வீரர் பணி நீக்கம் தபால் துறை நடவடிக்கையால் கிராம மக்கள் அதிர்ச்சி


பயிற்சிக்காக விடுமுறை எடுத்த வடுவூர் கபடி வீரர் பணி நீக்கம் தபால் துறை நடவடிக்கையால் கிராம மக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 29 Oct 2018 4:15 AM IST (Updated: 29 Oct 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

பயிற்சிக்காக விடுமுறை எடுத்த வடுவூர் கபடி வீரரை தபால் துறை பணி நீக்கம் செய்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் பணி வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது25). கபடி வீரரான இவர், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். இதன் விளைவாக தபால் துறையில் இளநிலை உதவியாளர் பணி கிடைத்தது. இந்த நிலையில் அருணுக்கு, “புரோ” கபடி லீக்கில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

தற்போது நடைபெற்று வரும் “புரோ” கபடி 6-வது சீசனில் அருண், தமிழ் தலைவாஸ் அணிக்காக வளையாடி வருகிறார். முன்னதாக குஜராத், பெங்கால் அணிகளுக்காக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். கபடி பயிற்சிக்காக அவ்வப்போது விடுமுறை எடுத்ததால், தபால் துறையின் சென்னை தெற்கு பிரிவு மூத்த கண்காணிப்பாளர் ரங்கநாதன், அருணை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து, கபடி வீரராக ஜொலித்து தபால் துறையில் வேலைக்கு சேர்ந்த அருண் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, அவருடைய கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

சிறந்த விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் பணி வழங்கிய தபால் துறை, பயிற்சிக்காக விடுமுறை எடுத்ததால் பணி நீக்கம் செய்து இருப்பது தவறு என கிராம மக்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

அருணை பணி நீக்கம் செய்த தபால் துறையின் நடவடிக்கை, தபால் துறையை பொருத்தவரை சரியாக இருக்கலாம். ஆனால் விளையாட்டு உணர்வு அடிப்படையில் இது தவறு. பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அருண், பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விளையாட வேண்டி உள்ளது. இதன் காரணமாக அவர் விடுமுறை எடுத்துள்ளார்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தபால் துறை அருணை பணி நீக்கம் செய்தது வேதனை அளிக்கிறது. எனவே பணி நீக்கம் தொடர்பான உத்தரவை ரத்து செய்து, அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

Next Story