காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாகன பிரசாரம்; அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்
திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரத்துறையின் சார்பில் காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை நேற்று, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் நிலவேம்பு கஷாயத்தினை வழங்கினார்.
இதன் பின்னர் அவர் பேசியதாவது:– திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி ஆகிய பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் துரிதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் உட்பட தீவிர காய்ச்சல் நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பொதுமக்களிடம் விழிப்புணர்வு வாகன பிரசாரம் மாவட்டம் முழுவதும் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் மருத்துவ அலுவலர்கள் உள்பட 1500 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் அபேட் மருந்து தெளித்தல், நீர் தேங்கும் இடங்களில் கொசு மருந்து தெளித்தல், கொசு ஒழிப்பு புகை தெளிப்பான் கொசு ஒழிப்பு பணிகள், மருத்துவ முகாம் நடத்துதல் நில வேம்பு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகின்ற இடங்களான சிமெண்டு தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், கிணறுகள், சிரட்டைகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காதவாறும் வீட்டுப்புறங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையற்ற குப்பைகள், பழைய டயர்கள் உள்ளிட்டவைகளை அகற்ற துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையினை அணுகி சிகிச்சை பெற வேண்டும். தங்களது பகுதிகளுக்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள வரும் சுகாதார பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு கொசுவை முழுமையாக ஒழித்து உடல் ஆரோக்கியத்துடனும், முழு சுகாதாரத்துடனும் பராமரித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1 கோடி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 816 கால்நடை மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.