திருவள்ளூரில் பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர்கள் பங்கேற்பு


திருவள்ளூரில் பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Oct 2018 4:00 AM IST (Updated: 29 Oct 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கண்காணிப்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் பனிந்தரரெட்டி, ராஜாராமன், கருணாகரன், ஜெயந்தி மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். இந்த கூட்டத்தில் வர உள்ள வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளையும், வெள்ளச்சேதங்களையும் தடுக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் அந்தந்த பகுதி அலுவலர்கள் மூலம் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் 8 பகுதிகள் மற்றும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளாக 39 பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவசர கால மீட்பு நடவடிக்கையின் போது பொதுமக்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களையும் பல்நோக்கு பாதுகாப்பு மையங்களான காட்டுப்பள்ளி, வைரவன்குப்பம், ஆண்டார்மடம், திருப்பாலைவனம், பள்ளிப்பாளையம், எளாவூர்-1 மற்றும் எளாவூர்-2 போன்ற பகுதிகள் மற்றும் தற்காலிக முகாம்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழையால் மிகவும் அதிக அளவு பாதிக்கப்படக்கூடிய இடங்களான ஆவடி வட்டத்தை சேர்ந்த பருத்திப்பட்டு, திருநின்றவூர் போன்ற இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொன்னேரி, பூந்தமல்லி வட்டத்தில் அமைந்துள்ள மிகவும் அதிக அளவு பாதிக்கப்படக்கூடிய இடங்களில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட குழுக்களை சேர்ந்த அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், சப்-கலெக்டர் ரத்னா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) திவ்யஸ்ரீ மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story