சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க அய்யப்பன் கோவிலுக்கு செல்லமாட்டோம் - பா.ஜ.க. மகளிர் அணியினர் உறுதி


சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க அய்யப்பன் கோவிலுக்கு செல்லமாட்டோம் - பா.ஜ.க. மகளிர் அணியினர் உறுதி
x
தினத்தந்தி 28 Oct 2018 10:45 PM GMT (Updated: 28 Oct 2018 8:06 PM GMT)

சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க அய்யப்பன் கோவிலுக்கு செல்லமாட்டோம் என்று பா.ஜ.க. மகளிர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை மாநில பா.ஜ.க. மகளிரணி செயற்குழு கூட்டம் 45 அடி சாலையில் உள்ள திருமண நிலையத்தில் நடைபெற்றது. மாநில மகளிரணி பொதுச்செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான நளினி தொடக்கவுரையாற்றினார். கூட்டத்திற்கு மாநில தலைவி விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஹேமமாலினி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுச்செயலாளர் விக்டோரியா கவுரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். புதுவை மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அய்யப்பன் கோவிலுக்கு செல்லமாட்டோம்.

* ‘மீ டு’ இயக்கத்தை வரவேற்கிறோம். இதனால் அனைத்து துறைகளிலும் மகளிருக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் வெளிச்சத்திற்கு வருகிறது.

* புதுச்சேரியில் ஒரு சில அழகு நிலையம், மசாஜ் சென்டர்களில் பெண்கள் தவறான பாதைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இதனை கண்டுகொள்ளாத மாநில அரசை பா.ஜனதா மகளிரணி வன்மையாக கண்டிக்கிறது.

* அங்கன்வாடி மையங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு, உணவுப்பொருட்கள் தகுதியான அனைவருக்கும் கிடைக்க மாநில அரசு வழிவகை செய்ய வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story