நிம்மதியான வாழ்வுக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம் - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு


நிம்மதியான வாழ்வுக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம் - மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 29 Oct 2018 4:15 AM IST (Updated: 29 Oct 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

மனிதனின் நிம்மதியான வாழ்வுக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த புல்வாய்க்கரையில் சுகாதாரத்துறை சார்பில் நலவாழ்வு மையம் திறப்பு விழா நடந்தது. விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மனிதனுடைய நிம்மதியான நலவாழ்வுக்கு உடல் ஆரோக்கியம் முக்கியமான ஒன்று. வசதி படைத்தவர்களுக்கு இணையாக ஏழை மக்களுக்கும் மருத்து வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்ற காப்பீட்டு திட்டத்தை இந்தியா முழுவதும் தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்ச ரூபாய் வரை ஏற்படும் மருத்துவ செலவுகளை மத்திய மற்றும் மாநில அரசே ஏற்கும். இந்தியா முழுவதிலும் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து கலெக்டர் சிவஞானம் பேசும்போது கூறியதாவது:–

தமிழக அரசு அனைத்து துணை சுகாதார நிலையங்களையும் நலவாழ்வு மையமாக மாற்ற திட்டமிட்டு உள்ளது. நலவாழ்வு மையத்தில் மகப்பேறு சேவைகள், முதியோர்களுக்கான மருத்துவ சேவைகள், அவசர மருத்துவ சேவைகள் என பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். இந்த சேவையின் மூலம் அருகில் உள்ள நலவாழ்வு மையத்திற்கு மக்கள் சென்று இலவசமாக மருந்து, மாத்திரைகள் பெற்று பயன் பெற முடியும் என்றார்.

விழாவில் பிரதமரின் மகப்பேறு உதவித்திட்டத்தில் 13 கர்ப்பிணிகளுக்கு ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.


Next Story