சம்பளம் வழங்கக்கோரி போராட்டம்: கல்லூரி பேராசிரியர்களுடன் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. சந்திப்பு
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் 2 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி கடந்த சில நாட்களாக பேராசிரியர்கள், அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் அலுவலர்கள் 200–க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 மாத காலமாக இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் 2 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி கடந்த சில நாட்களாக பேராசிரியர்கள், அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., கல்லூரியில் போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர்களை நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் கூறும்போது, கடந்த காலங்களில் நான் அமைச்சராக இருந்தபோது கல்லூரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளேன். தற்போது கடந்த சில மாதங்களாக கல்லூரியில் நடந்த சில பிரச்சினைகளால் கல்லூரியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. பேராசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றம் சென்று அதற்கான தீர்வை ஏற்படுத்தி தருவேன். மேலும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்று அறிக்கை வெளியிட வலியுறுத்துவேன் என்றார்.