சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு விற்றால் நடவடிக்கை மாநகர போலீஸ் எச்சரிக்கை


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு விற்றால் நடவடிக்கை மாநகர போலீஸ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Oct 2018 10:00 PM GMT (Updated: 28 Oct 2018 8:34 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை,

மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் காற்று மாசு மற்றும் பல நோய்களை ஏற்படுத்தக் கூடிய நச்சுப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பட்டாசு மற்றும் வெடி பொருட்களை தடை செய்ய வேண்டும். அதிக புகையை வெளியேற்றக்கூடிய மற்றும் அதிக ஒலி எழுப்ப கூடிய சரவெடிகளை தயாரிப்பதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. பட்டாசு பொருட்களை உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால், அவர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை அல்லது அபராதம் விதிக்கப்படும். வேதி உப்புகளுடைய பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளது. பண்டிகையின் போது, இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். அவ்வாறு பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வழிபாட்டுதலங்கள் மற்றும் ஒலி எழுப்பக்கூடாத இடங்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசு பொருட்களை விற்பனை செய்யும் பட்டாசு கடைக்காரர்களின் விற்பனை உரிமத்தை ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story