‘மது பங்காரப்பா எனது மகன் போன்றவர்’ தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி உருக்கம்


‘மது பங்காரப்பா எனது மகன் போன்றவர்’ தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி உருக்கம்
x
தினத்தந்தி 29 Oct 2018 3:30 AM IST (Updated: 29 Oct 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

‘மது பங்காரப்பா எனது மகன் போன்றவர்’ என்று தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி பேசினார்.

சிவமொக்கா, 

‘மது பங்காரப்பா எனது மகன் போன்றவர்’ என்று தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி பேசினார்.

இடைத்தேர்தல்

கர்நாடகத்தில் சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த இடைத்தேர்தல், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கும், தற்போதைய முதல்-மந்திரி குமாரசாமிக்கும் இடையேயான தேர்தல் என்று வர்ணிக்கப்படுகிறது. இதனால் சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் எடியூரப்பாவின் மகனை வீழ்த்த குமாரசாமி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் வியூகங்கள் அமைத்து வருகின்றனர்.

குமாரசாமி பிரசாரம்

இந்த நிலையில் சிவமொக்கா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் மது பங்காரப்பாவை ஆதரித்து நேற்று முதல்-மந்திரி குமாரசாமி சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா சிரளகொப்பா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவர், பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிரளகொப்பாவுக்கு வந்தார்.

அங்கு திறந்த வேனில் குமாரசாமி வீதி, வீதியாக சென்று மது பங்காரப்பாவுக்கு ஆதரவாக வாக்கு வேட்டையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

எனது மகனை போன்றவர்

மது பங்காரப்பா எனது மகனை போன்றவர். அனைவரும் மது பங்காரப்பாவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். எடியூரப்பா சிவமொக்கா தொகுதி எம்.பி.யாக இருந்தபோதும், அவருடைய மகன் ராகவேந்திரா எம்.பி.யாக இருந்தபோதும், தொகுதியின் வளர்ச்சிக்காக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மது பங்காரப்பாவை தேர்ந்தெடுத்தால், சிவமொக்கா வளர்ச்சிக்காக அவர் பாடுபடுவார்.

ஈசுவரப்பா என்னை பற்றி அவதூறாக பேசுகிறார். ஒரு முதல்-மந்திரிக்கு அவர் கொடுக்கும் மரியாதை இது தான். ஈசுவரப்பா மரியாதையுடன் பேச வேண்டும். அரசின் நிதி நிலைமை சரியில்லாத நிலையிலும் ரூ.46 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி ஈசுவரப்பா கூறியுள்ளார். அந்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றி விட்டேன். ஈசுவரப்பா, எதுவும் தெரியாமல் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

போலீஸ் தடியடி

முதல்-மந்திரி குமாரசாமி நேற்று சிரளகொப்பாவில் பிரசாரம் செய்தபோது, ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போலீசார் ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் மீது லேசான தடியடி நடத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story