தண்ணீரை சேமிக்க திராவிட கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லை அன்புமணி ராமதாஸ் எம்.பி. குற்றச்சாட்டு
தண்ணீரை சேமிக்க திராவிட கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் எம்.பி. குற்றம் சாட்டி உள்ளார்.
கபிஸ்தலம்,
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் எம்.பி. டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை, திருவலஞ்சுழி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று அவர் பிரசார பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் ஆபத்து குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
சுவாமிமலையில் நடந்த பிரசாரத்தின்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
எனது பிரசார பயணத்தின் நோக்கம் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான். காவிரி டெல்டாவுக்கு பேராபத்து ஏற்பட்டு உள்ளது. இது பற்றி பலருக்கு தெரியவில்லை. நமக்கு உணவளித்த இந்த காவிரி டெல்டாவில் நம் சந்ததியினரும் உணவு பெற வேண்டும்.
ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டம், பெட்ரோலிய மண்டல திட்டம், மணல் கொள்ளை, நிலக்கரி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தி காவிரி டெல்டாவை அழிக்க மத்திய, மாநில அரசுகள் சூழ்ச்சி செய்கிறார்கள். கடந்த 50 ஆண்டு காலத்தில் 2 திராவிட கட்சிகளும் இணைந்து தண்ணீரை சேமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவிரியில் மேட்டூர் அணையை தவிர எந்த ஒரு அணையையும் கட்டவில்லை. கடந்த மாதம் 173 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்து விட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்டா பகுதியில் மட்டும் 28 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டது. தற்போது 15 லட்சம் ஏக்கர் மட்டும் விவசாயம் நடக்கிறது.
இதற்கு காரணம் கர்நாடகத்தில் இருந்து வரும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது தான். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி, மாநில துணை செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் சங்கர், இளைஞரணி நிர்வாகிகள் வினோத், பழனிசாமி, வக்கீல் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பாபநாசத்தில் அன்புமணி ராமதாஸ் பிரசார பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதியில் உள்ள கச்சா எண்ணெய் கிணறுகளை மூட வேண்டும். இப்பகுதியை சேர்ந்த வேளாண்மை துறை அமைச்சர் விவசாயத்தை பாதுகாக்க முன்வர வேண்டும். சட்டசபையில் அதற்காக குரல் கொடுக்கவேண்டும். மணல் கொள்ளை முழுமையாக தடுக்கக்கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதில் ராஜபக்சே மட்டும் குற்றவாளி அல்ல. இப்போதைய இலங்கை அதிபர் சிறிசேனாவும் குற்றவாளி தான். இலங்கை பிரதமராக ராஜபக்சேவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகாரம் அளிப்பதை இந்தியா தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story