ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை கலைநிகழ்ச்சி மூலம் பயணிகளிடம் விழிப்புணர்வு ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஏற்பாடு


ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை கலைநிகழ்ச்சி மூலம் பயணிகளிடம் விழிப்புணர்வு ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஏற்பாடு
x
தினத்தந்தி 28 Oct 2018 10:15 PM GMT (Updated: 28 Oct 2018 10:03 PM GMT)

ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது என கலைநிகழ்ச்சி மூலம் பயணிகளிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தஞ்சாவூர்,
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகை முக்கியமானது. தீபாவளி என்றாலே பட்டாசு தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவுக்கு பட்டாசுகளை மக்கள் வெடித்து மகிழ்ச்சி அடைவார்கள். புத்தாடை வாங்குவதற்கு ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுவதை போல பட்டாசு கடைகளிலும் அலைமோதும். இப்படி வாங்கப்படும் பட்டாசுகளை ரெயில்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றி கொள்ளும் பொருட்களை ரெயில்களில் கொண்டு சென்றால் ரெயில்வே சட்டப்பிரிவு 164-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் ரெயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்தி பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் துண்டுபிரசுரங்கள் நேற்று வினியோகம் செய்யப்பட்டன.

அதில், ரெயில்களில் அபாயகரமான பொருட்கள், பட்டாசுகள் கொண்டு செல்லக்கூடாது. ரெயில்களில் படிக்கட்டில் அமர்ந்தோ, நின்றோ பயணம் செய்யக்கூடாது. படிக்கட்டில் நின்று கொண்டு செல்பி எடுக்கக்கூடாது. தகுந்த காரணமின்றி அலார சங்கிலியை பிடித்து இழுக்கக்கூடாது. ஓடும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது. ரெயில் பயணத்தின்போது குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மற்றவர்களால் இடையூறு ஏற்பட்டால் செல்போன் மூலம் 182 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ரெயில்களில் பட்டாசுகள் எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா? என சோதனை நடத்தியதுடன் ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடமும் துண்டு பிரசுரங்களை போலீசார் வினியோகித்தனர். திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் 8 பேர் தப்பாட்டம் மூலம் ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்லக்கூடாது என பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் நிருபர்களிடம் கூறும்போது, திருச்சி கோட்டத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் கலைநிகழ்ச்சி மூலம் பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களில் தப்பாட்டம் மூலம் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் துண்டுபிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன. ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் கொண்டு சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும். ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. யாரும் பட்டாசுகளை ரெயில்களில் கொண்டு வரக்கூடாது என்பதற்காகவே ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் மூலம் கலைநிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றார்.


Next Story