சிறுமுகை அருகே பாலம் தண்ணீரில் மூழ்கியது: பரிசலில் சென்று பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
சிறுமுகை அருகே உள்ள காந்தவயல் பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசலில் சென்று பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அடுத்துள்ள காந்தவயல் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன் (வயது 37), விவசாய தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (27). இவர்களுக்கு நிதீஸ் (5) மணீஸ் (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கவிதா 3-வது முறையாக கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் லிங்காபுரத்தில் இருந்து காந்தவயலுக்கு செல்லும் வழியில் காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் அந்த வழியாக காந்தவயலுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் காந்தையாற்று பாலம் அருகே நிறுத்தப்பட்டது.
மாற்றுப்பாதையில் சுற்றி சென்றால் நீண்ட நேரம் ஆகும் என்பதால், மருத்துவ உதவியாளர் ரோஜா, டிரைவர் அருண்குமார் ஆகியோர் பரிசல் மூலம் காந்தவயலுக்கு சென்றனர். பின்னர் கவிதாவிற்கு அவருடைய தாயார் சித்ரா உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர். இதில் கவிதாவிற்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில், அந்த குழந்தையின் உடல்நிலை மோசமானதால், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசல் மூலம் காந்தையாற்று பாலத்தை கடந்து சென்று, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். இதற்கிடையே கவிதாவின் உடல்நிலையும் மோசமானதால், காரமடை சீளியூரில் இருந்து மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
அந்த ஆம்புலன்ஸ் மாற்றுப்பாதையில் காந்தவயலுக்கு சென்று கவிதாவை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தாய் மற்றும் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் தண்ணீர் தேங்கி காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் மூழ்கி விட்டது. இதனால் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் காந்தவயல், காந்தையூர், உளியூர், ஆளூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம்.
பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அவசர தேவைக்கு பொதுமக்கள் பரிசலை பயன்படுத்தி வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால், தாய், குழந்தையை காப்பாற்ற முடிந்தது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவ வசதிகள் பெற அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story