கட்டுமான பணியின்போது விபரீதம்: இரும்புக்கம்பி வயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


கட்டுமான பணியின்போது விபரீதம்: இரும்புக்கம்பி வயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 28 Oct 2018 10:48 PM GMT (Updated: 28 Oct 2018 10:48 PM GMT)

இரும்புக்கம்பி வயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலூர்,

கட்டுமான பணியின்போது மாடிக்கு ஏற்றிய இரும்புக்கம்பி வயரில் உரசியதில் 4 தொழிலாளிகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் ஒருவர் இறந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் சின்ன அல்லாபுரம் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சார்னா. இவர் சின்ன அல்லாபுரம் அருகேயுள்ள பனந்தோப்பு பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டுமான பணியில் அடுக்கம்பாறை அருகேயுள்ள அ.கட்டுப்படி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 44), ஜோதிலிங்கம் (30), சின்ன மசூதிதெருவை சேர்ந்த ரியாஸ் (21), கஸ்பாவை சேர்ந்த முரளி (42) ஆகியோர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேல்தளம் அமைப்பதற்கு இரும்பு கம்பிகளை கீழ்பகுதியில் இருந்து மாடிக்கு ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கட்டிடத்தின் அருகே சென்ற உயர் மின்னழுத்த கம்பியின் மீது இரும்பு கம்பி உரசி மின்சாரம் தாக்கியது. இதில் ராதாகிருஷ்ணன், ஜோதிலிங்கம், ரியாஸ், முரளி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் மனைவி ராதிகா பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story