வெளிமாநிலங்களில் இருந்து ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3.14 கோடி பொருட்கள் பறிமுதல்
வெளிமாநிலங்களில் இருந்து மும்பைக்குஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3 கோடியே 14 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை,
வெளிமாநிலங்களில் இருந்து மும்பைக்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் கொண்டு வரப்பட்ட ரூ.3 கோடியே 14 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரகசிய தகவல்
மும்பையில் தீபாவளி பண்டிகையையொட்டி வெளிமாநிலங்களில் இருந்து ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் பரிசுபொருட்கள் ரெயிலில் கொண்டு வரப்படுவதாக ஜி.எஸ்.டி. வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சம்பவத்தன்று மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இறங்கிய பார்சல்களை பிரித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அப்போது ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் செல்போன்கள், பவர்பேங்க் உள்ளிட்ட ஏராளமான எலக்ட்ரிக் சாதனங்கள் ரெயிலில் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ரூ.3 கோடியே 14 லட்சம் மதிப்பு
இதனை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மேலும் பல பொருட்கள் டோங்கிரி, கல்பாதேவியில் உள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள், கைக்கெடிகாரங்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 96 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியே 14 லட்சம் ஆகும். இந்த பொருட்கள் அனைத்தும் ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடையவர்களை பிடிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story