தக்கலை பகுதியில் பரவும் மர்ம காய்ச்சல்: அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் 8 பேருக்கு தீவிர சிகிச்சை
தக்கலை பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து தக்கலை அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பத்மநாபபுரம்,
குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும், பன்றி காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாகர்கோவில் சற்குணவீதியை சேர்ந்த திரேஷா பிரைட், தக்கலை பருத்திகாட்டுவிளையை சேர்ந்த கர்ப்பிணி சுகன்யா ஆகியோர் பன்றி காய்ச்சலில் இறந்துள்ளனர். மேலும், பலர் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே, தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தற்போது மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற வருகிறார்கள். இதனால், காலை முதல் மாலை வரை ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதுகிறது. சிகிச்சை பெற வருகிறவர்களில் பலர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சாலல் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி பிரிவு வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் தற்போது 4 பெண்கள் உள்பட 8 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த வார்டில் நோயாளிகளின் படுக்கைகளில் கொசு வலை கட்டப்பட்டுள்ளது. மேலும், இவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story