கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்: சத்துணவு ஊழியர்கள் 742 பேர் கைது
தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் செய்தனர். 742 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி,
சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக் கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். உணவு தயாரிப்பு செலவின தொகையை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குழந்தை ஒன்றுக்கு ரூ.5 என உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும். பெண் ஊழியர்களுக்கு 9 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக சத்துணவு ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்து, கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதையொட்டி தேனி பள்ளிவாசல் தெருவில் இருந்து நேரு சிலை நோக்கி சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக வந்தனர்.
அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி வந்தனர். ஊர்வலத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தேனி மாவட்ட தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார். ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் கம்பம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
அப்போது மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 742 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு சமைக்க தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக தற்காலிக பணியாளர்கள் மூலம் சத்துணவு சமைத்து வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story