கலெக்டர் அலுவலகத்தில்: 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தில்: 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Oct 2018 3:00 AM IST (Updated: 29 Oct 2018 11:24 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

புதுச்சேரி மாநிலம் தொண்டமானத்தம் பகுதியை சேர்ந்தவர் அன்பு மனைவி சசிகலா (வயது 38). இவர் தனது தங்கை பரிமளா (33), மற்றொரு தங்கையான வசந்தியின் மகள்கள் அபிநயா (14), அட்சயா (11) ஆகியோருடன் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த இவர்கள் 4 பேரும் தீக்குளிக்க முடிவு செய்து தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தங்கள் மீது ஊற்றிக்கொள்ள முயன்றனர். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார், அந்த 4 பேரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சசிகலா கூறுகையில், எனது தங்கை வசந்திக்கும் விழுப்புரம் அருகே கெடாரை சேர்ந்த குப்பண்ணனுக்கும் திருமணம் நடந்து 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டில் குடும்ப தகராறு காரணமாக குப்பண்ணன், எனது தங்கை வசந்தியை தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்று சில நாட்களில் சிகிச்சை பெற்று பின்னர் உயிரிழந்தார். அதன் பிறகு வசந்தியின் மகள்களான அபிநயா, அட்சயா ஆகிய இருவரையும் நான் புதுச்சேரி தொண்டமானத்தத்திற்கு அழைத்துச்சென்று வளர்த்து வருகிறேன். வசந்தி இறந்ததற்கு பிறகு அவரது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.

இதுபற்றி கெடார் போலீசில் புகார் செய்தும் குப்பண்ணன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் அபிநயா, அட்சயா ஆகிய இருவரின் படிப்பு செலவிற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அவர்கள் 4 பேரையும் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story