அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமமக்கள்
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட காரியானூர், வெள்ளுவாடி, ஜெயந்தி காலனி, மேல்வாடி, சோழைநகர் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சரக்கு வாகனங்களில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து இறங்கினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கிராமமக்கள் கூறுகையில், காரியானூர், வெள்ளுவாடி, ஜெயந்தி காலனி, மேல்வாடி, சோழைநகர் ஆகிய பகுதிகளில் பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லை பகுதிகளாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமங்களை கண்டு கொள்வதில்லை.
மேலும் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி ஆகியவை எங்கள் கிராமங்களுக்கு முழுமையாக செய்து கொடுக்கவில்லை. பெரம்பலூரில் இருந்து எங்கள் கிராமங்களுக்கு நேரடியாக அரசு பஸ்கள் இல்லை. இதனால் பெரம்பலூருக்கு உயர்கல்வி பயில செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எங்கள் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சரியான பஸ் வசதி இல்லாததால் பள்ளிகளுக்கு தாமதமாக வரவேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
காரியானூரில் இயங்கி வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றை நெற்குணம் மாற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வங்கியில் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளனர். மேலும் விவசாயிகள் விவசாய கடன் பெற்று வருகின்றனர். அந்த வங்கியை மாற்றினால் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுவார்கள். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே பொதுமக்கள் சார்பில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எங்கள் கிராமங்களின் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை. அதனை கண்டித்து தான் நாங்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்றனர்.
மீண்டும் கலெக்டரிடம் எங்கள் கிராமங்களின் அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றக்கோரியும், காரியானூரில் இயங்கி வரும் வங்கியை மாற்றக்கூடாது எனவும் மனு கொடுக்கவுள்ளோம் என்றனர். இதையடுத்து காரியானூர், வெள்ளுவாடி, ஜெயந்தி காலனி, மேல்வாடி, சோழைநகர் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்தவர்களில் சிலர் சென்று கலெக்டர் சாந்தாவை சந்தித்து ஒரு மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
வேப்பந்தட்டை தாலுகா தொண்டப்பாடி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தொண்டப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பாலையூர் கிராமத்தில் குடிநீர் கிணறு வெட்ட போதிய இடவசதி இருந்தும், அந்த கிராமத்திற்காக தொண்டப்பாடி கிராம எல்லைக்குட்பட்ட ஏரியில் குடிநீர் கிணறு வெட்டும் பணியை எந்தவித முன்னறிவிப்பின்றியும், பொதுமக்கள் அனுமதியின்றியும் தொடங்கியுள்ளனர். இதனால் 2 கிராமங்களுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும், பிரச்சினையும் வராமல் இருப்பதை கருத்தில் கொண்டு ஏரியில் கிணறு வெட்டும் பணியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story