கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 480 பேர் கைது


கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 480 பேர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 3:45 AM IST (Updated: 30 Oct 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலி யுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 480 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,
சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்டபூர்வ மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானிய தொகையினை குழந்தை ஒன்றுக்கு ரூ.5 ஆக வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி முதல் 4 நாட்கள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்காததால் நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் பகுதியில் மதுரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் அன்பு, பொருளாளர் அன்னபூரணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 430 பெண்கள் உள்பட சத்துணவு ஊழியர்கள் 480 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் புதுக்கோட்டை-மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோல கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்களும் தங்களது பணியை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு சென்று உணவு பொருட்களை எடுத்து உணவுகளை தயார் செய்து, மாணவர்களுக்கு வழங்கினர்.

Next Story